பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் இல்லாததால் ஆசிரியர்களுக்கு விடுமுறை விடப்படுமா?


பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் இல்லாததால் ஆசிரியர்களுக்கு விடுமுறை விடப்படுமா?
x
தினத்தந்தி 26 April 2021 4:13 AM IST (Updated: 26 April 2021 4:13 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் இல்லாததால் ஆசிரியர்களுக்கு விடுமுறை விடப்படுமா என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

ஈரோடு
பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் இல்லாததால் ஆசிரியர்களுக்கு விடுமுறை விடப்படுமா என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
தேர்வு தள்ளி வைப்பு
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதையொட்டி இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதுபோல் பள்ளிக்கூடங்களில் மாணவர் வருகை முற்றிலும் நிறுத்தப்பட்டு இருக்கிறது. பிளஸ்-2 செய்முறை தேர்வுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, விடுதி மாணவர்களை கூட தங்க வைக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கூட நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளனர். பிளஸ்-2 பொதுத்தேர்வும் நாள் குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
மிகப்பெரிய பாதிப்பு
ஆனால், அனைத்து அரசு, தனியார் பள்ளிக்கூடங்கள் வழக்கம்போல திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. ஆசிரிய-ஆசிரியைகள் பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை இன்றி வருகிறார்கள். வழக்கமான கல்வி ஆண்டாக இருந்தால் கோடை விடுமுறை இந்த நேரத்தில் தொடங்கி இருக்கும். இந்த ஆண்டு விடுமுறைக்கான அறிவிப்பும் இதுவரை இல்லை.
இதுபற்றி அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:-
கொரோனா பரவல் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. பள்ளிக்கூடங்கள் எல்லாம் உயிரற்ற கட்டிடமாகவே உள்ளன. ஆசிரியர்களாகிய எங்களுக்கு மாணவ- மாணவிகளை பார்த்து அவர்களுக்கு கற்றுக்கொடுப்பதில்தான் மகிழ்ச்சி. ஆனால், கடந்த ஒரு ஆண்டு காலமாக பள்ளிக்கூடங்கள் வெறுமனே நடந்து வருகின்றன.
தேர்வுகள் ரத்து
இதனால் அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் வெறுமனே இல்லை. வகுப்பு எடுப்பதை விட அதிக சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் ஏராளமான புள்ளி விவர சேகரிப்பு பணிகள் வழங்கப்பட்டது. சத்துணவு திட்ட மாணவ-மாணவிகளுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் பணி, புத்தகம், சீருடை வழங்கும் பணிகள் இருந்தன. இதை எல்லாம் விட, முதியோர்களுக்கு கல்வி கற்பிக்கும் ‘கற்போம் எழுதுவோம் திட்டத்தை’ கட்டாயப்படுத்தி தன்னார்வலர்களுக்கு பதிலாக ஆசிரியர்களை வைத்து நடத்தினார்கள். 
அதையும் முழுமையாக முடிக்காமல் பாதியில் நிறுத்தி விட்டனர். பெரும்பாலான அரசு பள்ளிக்கூடங்களில் நூலகங்கள் கிடையாது. ஆனால் பள்ளிக்கூட தேர்வுகள் ரத்து என்ற அறிவிப்புக்கு பின்னர் நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்குவதாக கூறி ஒரு தொகையை ஒதுக்கீடு செய்து, அந்த தொகையையும் கல்வித்துறையினரே காசோலையாக பெற்றுக்கொண்டனர்.
கோடை விடுமுறை
இதுபோல் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்க நிதி ஒதுக்கி, அந்த நிதியையும் காசோலை மூலம் கல்வித்துறை அலுவலகங்களிலேயே பெற்றுக்கொண்டனர். சமீபத்தில் இன்டர்நெட் இணைப்புக்காக தலா ரூ.35 ஆயிரம் ஒதுக்கீடு செய்து அதற்கான காசோலையும் பள்ளிகல்வித்துறை அதிகாரிகளே வாங்கிக்கொண்டனர்.
இதில் எந்த திட்டமும் சரியானதா முறையானதா என்பது ஆசிரியர்களுக்கு தெரியாது. ஆனால் இது மொத்தமாக புள்ளிவிவர கணக்குகளை ஆசிரிய-ஆசிரியைகள் சேகரிக்க வேண்டும். அத்துடன் மாணவ-மாணவிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் வகுப்பு எடுக்க வேண்டும். செல்போன் இல்லாத மாணவ-மாணவிகளுக்கு வீடு தேடிச்சென்று பாடம் நடத்த வேண்டும் என்ற உத்தரவுகள் மட்டும் அதிகாரிகள் மூலம் வழங்கப்படுகிறது.
பள்ளிக்கூடத்துக்கு மாணவர்கள் வரவில்லையே தவிர, பணிச்சுமை அதிகமாக்கப்பட்டு உள்ளது. எனவே வழக்கம்போல வழங்கப்படும் கோடை விடுமுறையை ஆசிரிய-ஆசிரியைகளுக்கும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story