ஆட்டோ, கால்டாக்சிகள் குறைவாக இயக்கம்: ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் தவிப்பு
ஆட்டோ, கால்டாக்சிகள் குறைவாக இயக்கப்பட்டதால், ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் தவித்தனர்.
ஈரோடு
ஆட்டோ, கால்டாக்சிகள் குறைவாக இயக்கப்பட்டதால், ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் தவித்தனர்.
முழு ஊரடங்கு
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆட்டோக்கள், கால்டாக்சிகள், பஸ்கள் இயக்கப்படவில்லை. அதேசமயம் ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.
அந்தந்த ரெயில் நிலையங்களில் ஆட்டோக்கள், வாடகை கார்கள் மூலமாக ரெயில் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. இதற்காக ரெயில் நிலையங்களில் ஆட்டோக்கள், கால் டாக்சிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.
பயணிகள் தவிப்பு
நேற்று முழு ஊரடங்கு காரணமாக பெரும்பாலானவர்கள் பயணம் செய்வதை தவிர்த்தார்கள். இதன் காரணமாக முன்கூட்டியே ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களும் தங்களது பணத்தை ரத்து செய்தார்கள். இதனால் ஈரோடு வழியாக சென்ற ரெயில்கள் வெறிச்சோடியே காணப்பட்டன.
ஈரோடு ரெயில் நிலையத்தில் வழக்கமாக இயக்கப்படும் ஆட்டோக்கள் நேற்று ஓடவில்லை. வாடகை கார்களும் இயங்கவில்லை. இதனால் வெளியூரில் இருந்து ரெயில் மூலமாக வந்து இறங்கியவர்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டார்கள். ஈரோட்டில் ஒரு சில நிறுவனங்களின் கால் டாக்சிகள் மட்டுமே இயக்கப்பட்டன. அந்த கால் டாக்சிகள் மூலமாக பயணிகள் சென்றார்கள். குறிப்பாக வடமாநிலத்தை சேர்ந்த ரெயில்வே பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு செல்ல முடியாமல், ரெயில் நிலைய வளாகத்தில் ஆங்காங்கே உட்கார்ந்து இருந்தார்கள். இதேபோல் நேற்று ரெயிலில் செல்வதற்கு முன்பதிவு செய்திருந்த பயணிகளும் முன்கூட்டியே ரெயில் நிலையத்துக்கு வந்து தங்கியிருந்தார்கள்.
Related Tags :
Next Story