முழு ஊரடங்கு எதிரொலி: சேலத்தில் சாலைகள் வெறிச்சோடின-கடைகள் அடைப்பு
சேலத்தில் சாலைகள் வெறிச்சோடின-கடைகள் அடைப்பு
சேலம்:
சேலத்தில் முழு ஊரடங்கு எதிரொலியாக சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கினர்.
முழு ஊரடங்கு
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அதனை தொடர்ந்து நேற்று எவ்வித தளர்வும் இல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
சாலைகள் வெறிச்சோடின
அதன்படி சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் மாவட்டம் முழுவதும் வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள், ஓட்டல்கள், தினசரி காய்கறி மார்க்கெட்டுகள், டீக்கடைகள், மளிகை கடைகள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர், இறைச்சி கடைகள் மற்றும் மீன் மார்க்கெட் அனைத்தும் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
முழு ஊரடங்கால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கினர். சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலம், கந்தம்பட்டி, திருவாக்கவுண்டனூர், இரும்பாலை பிரிவு மேம்பாலம், பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் பகுதிகளில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
போலீசார் கண்காணிப்பு
சேலத்தில் பஸ், கார், லாரி, ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனங்களும் ஓடவில்லை. அதேநேரத்தில் பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர். மருந்து கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டிருந்தன.
சேலம் 4 ரோடு, கலெக்டர் அலுவலகம், புதிய பஸ் நிலையம், ஜங்ஷன் ரெயில் நிலையம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, செவ்வாய்ப்பேட்டை, அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, 5 ரோடு, கோரிமேடு, கன்னங்குறிச்சி, கந்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அத்தியாவசிய தேவை இல்லாமல் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
ஹெல்மெட், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவை இல்லாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தவர்கள், திருமண அழைப்பிதழ்களை காண்பித்து சென்றனர்.
கடைகள் அடைப்பு
சேலம் மாநகரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடைவீதியில் ஜவுளி மற்றும் நகைக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. செவ்வாய்ப்பேட்டை, பால் மார்க்கெட், லீ பஜார் உள்ளிட்ட பகுதிகளில் மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் அந்த பகுதி ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடியது.
அஸ்தம்பட்டி, திருச்சி சாலை, சூரமங்கலம், அம்மாபேட்டை, பெரமனூர், அழகாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் டீக்கடை, ஓட்டல்கள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அதேநேரத்தில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம்போல் செயல்பட்டன. ஆனால் வாடிக்கையாளர்கள் யாரும் வராததால் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் விற்பனை பாதிக்கப்பட்டது. ஆங்காங்கே பால் முகவர்கள் வழக்கம் போல் பால் விற்பனையில் ஈடுபட்டனர்.
உழவர் சந்தைகள்
சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள லாரி மார்க்கெட்டில் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சேலத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, தாதகாப்பட்டி ஆகிய உழவர் சந்தைகள் வழக்கம் போல் செயல்பட்டன.
ஆனால் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் வரவில்லை. இதனால் உழவர் சந்தைகள் வெறிச்சோடின.
ஏற்காடு
ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் முழு ஊரடங்கையொட்டி நேற்று அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. தேவையின்றி வெளியே சுற்றிய மக்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். மேலும் ஏற்காடு பகுதியில் உள்ள அணைத்து கடைகளும் மூடப்பட்டன.
Related Tags :
Next Story