கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறியதாக சேலத்தில் 3 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம்
3 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம்
சேலம்:
சேலத்தில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறியதாக 3 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
திருமண நிகழ்ச்சி
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் நலன் கருதியும் நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் முகூர்த்த நாள் என்பதால் பல்வேறு திருமண மண்டபங்களில் திருமணங்கள் நடைபெற்றது. ஆனால் திருமண நிகழ்ச்சியில் 100 பேர் மட்டும் பங்கேற்க வேண்டும், அனைவரும் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
ரூ.5 ஆயிரம் அபராதம்
இந்த நிலையில், சேலத்தில் உள்ள திருமண மண்டபங்களில் கொரோனா கட்டுப்பாடு விதிகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். அதன்படி சேலம் சூரமங்கலம் திருவாக்கவுண்டனூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமண விழா நடைபெற்றது.
அப்போது, மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து பார்த்தபோது, நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக ஆட்கள் கலந்து கொண்டதும், திருமணத்தில் பங்கேற்றவர்கள் முககவசம் அணியாமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறியதாக கூறி அந்த திருமண மண்டப உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
எச்சரிக்கை
இதேபோல், சூரமங்கலம் மற்றும் மரவனேரி பகுதிகளில் உள்ள 2 திருமண மண்டபங்களிலும் மாநகராட்சி அதிகாரிகள் சென்று பார்த்தனர். அப்போது, அந்த 2 திருமண மண்டபங்களிலும் நடந்த திருமண விழாக்களில் பங்கேற்றவர்கள் முக கவசம் அணியாமல் இருந்தது தெரியவந்தது.
மேலும், கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. இதனால் 2 திருமண மண்டபங்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதேநேரத்தில் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பன உள்பட விதிகளை கடைபிடிக்குமாறு திருமண மண்டபங்களின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.
Related Tags :
Next Story