ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 313 பேருக்கு கொரோனா தொற்று- ஈரோட்டில் பெண் பலி


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 313 பேருக்கு கொரோனா தொற்று- ஈரோட்டில் பெண் பலி
x
தினத்தந்தி 26 April 2021 4:15 AM IST (Updated: 26 April 2021 4:16 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 313 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் ஈரோட்டில் பெண் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.

ஈரோடு,

கொரோனா வைரசின் 2-வது அலை ஈரோடு மாவட்டத்தில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தல் போன்ற சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இதற்காக நோய் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் தற்காலிக பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

313 பேருக்கு தொற்று

கடந்த 23-ந்தேதி மாவட்டத்தில் 331 பேருக்கும், நேற்று முன்தினம் புதிய உச்சமாக 392 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 900-ஆக உயர்ந்தது.

பெண் பலி

இதற்கிடையில் ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்த 56 வயது பெண் ஒருவர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக கடந்த 21-ந்தேதி சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் இறந்தார்.

2,220 பேர் சிகிச்சை

இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 154 ஆக உயர்ந்தது. மேலும் நேற்று ஒரே நாளில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 212 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 16 ஆயிரத்து 526 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.
தற்போது தொற்று உள்ள 2 ஆயிரத்து 220 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

Next Story