பொள்ளாச்சி அருகே 16 வயது சிறுமியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
பொள்ளாச்சி அருகே 16 வயது சிறுமியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே 16 வயது சிறுமியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மேலும் உறவினர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
16 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம்
பொள்ளாச்சி அருகே ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 34), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் சந்திரசேகருக்கு பழக்கம் ஏற்பட்டது.
வறுமையில் உள்ள சிறுமியின் பெற்றோரிடம் சந்திரசேகர் பண உதவி செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை 2-வது திருமணம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக தகவல் அறிந்த குழந்தைகள் நலவாரிய அலுவலர் ராணி பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
கூலி தொழிலாளி போக்சோவில் கைது
இதில், சந்திரசேகர் 16 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோவை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும், குழந்தை திருமணத்துக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் உள்ளிட்ட உறவினர்கள் 6 பேர் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின்கீழ் போலீசார், வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story