காஞ்சீபுரத்தில் வாக்கு எண்ணும் மையம் எதிரே நின்ற கன்டெய்னர் லாரிகளால் பரபரப்பு


காஞ்சீபுரத்தில் வாக்கு எண்ணும் மையம் எதிரே நின்ற கன்டெய்னர் லாரிகளால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 April 2021 5:46 AM GMT (Updated: 26 April 2021 5:46 AM GMT)

காஞ்சீபுரத்தில் வாக்கு எண்ணும் மையம் எதிரே நின்ற கன்டெய்னர் லாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் காஞ்சீபுரத்தை அடுத்த பொன்னேரிக்கரை அண்ணா என்ஜினீயரிங் உறுப்பு கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று 3 மணி அளவில் வாக்கு எண்ணும் மையத்திற்கு எதிரே தேசிய நெடுஞ்சாலையில் 3 கன்டெய்னர் லாரிகள் நின்றன. ½ மணி நேரமாக சந்தேகமடையும் வகையில் நின்ற லாரிகளால் கட்சி நிர்வாகிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

அப்புறப்படு்த்தினர்

மேலும் இது குறித்து வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த பாதுகாப்பு அலுவலர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்ததன் பேரில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின்பேரில், மாவட்ட போலீஸ் துறையும், வருவாய்த்துறையும் விரைந்து சென்று கன்டெய்னர் லாரிகளை அப்புறப்படுத்தினர்.

விசாரணையில் கன்டெய்னர் லாரி பழுதடைந்த நிலையில், அதற்கு உதவி செய்ய 2 கன்டெய்னர் லாரிகள் நின்றது தெரியவந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story