ஆன்லைனில் கல்லூரி தேர்வுகள் நடத்துவது குறித்து கவர்னருடன், மந்திரி உதய் சாமந்த் ஆலோசனை


ஆன்லைனில் கல்லூரி தேர்வுகள் நடத்துவது குறித்து கவர்னருடன், மந்திரி உதய் சாமந்த் ஆலோசனை
x
தினத்தந்தி 26 April 2021 2:00 PM GMT (Updated: 26 April 2021 2:00 PM GMT)

ஆன்லைனில் கல்லூரி தேர்வுகள் நடத்துவது குறித்து கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியிடம் உயர்கல்வி துறை மந்திரி உதய் சாமந்த் ஆலோசனை நடத்தினார்.

மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. எனவே மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் 12-ம் வகுப்பு பொது தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் குறித்து அரசு இதுவரை எந்த முடிவுகளையும் அறிவிக்கவில்லை. இந்தநிலையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை மும்பையில் உயர்கல்வித்துறை மந்திரி உதய் சாமந்த் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், கொரோனா பரவல் காரணமாக மாநிலத்தில் உள்ள 13 அரசு பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து கவர்னருடன் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த சந்திப்புக்கு பிறகு மந்திரி உதய் சாமந்த் கூறியதாவது:-

ஆன்லைனில் கல்லூரி தேர்வுகள் நடத்தும் முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கி உள்ளார். மேலும் விடைத்தாள் திருத்தம், தேர்வு முடிவுகள் அறிவிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story