தூத்துக்குடியில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு
தூத்துக்குடியில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் சலூன் கடைகள் இயங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று முடிதிருத்தும் தொழிலாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்து உள்ளனர்.
கோரிக்கை மனு
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் பொதுமக்கள் திங்கட்கிழமை தோறும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வருகின்றனர். அதன்படி நேற்று பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கு உள்ள பெட்டியில் மனுக்களை போட்டு சென்றனர்.
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு முடிதிருத்தும் அழகுகலை தொழிலாளர் நலச்சங்கம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கத்தினர் தலைவர் இசக்கிமுத்து, செயலாளர் விஜயகுமார், பொருளாளர் பாண்டியன், மாவட்ட அமைப்பாளர் ராஜ்குமார் மற்றும் சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-
அனுமதி
தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டினம், கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் சலூன் கடைகள், அழகு நிலையங்களை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக 4 மாதங்கள் சலூன் கடைகளை அடைத்தோம். அதனால் கடை வாடகை, மின்கார கட்டணம் செலுத்த முடியாமல் மிகவும் சிரமத்தில் உள்ளோம். இந்த நிலையில் மீண்டும் கொரோனாவை காரணம் காட்டி எல்லா கடைகளும் திறந்து இருக்கும் நிலையில் சலூன் கடைகளை மட்டும் மூட சொல்வது நியாயமாகாது. தூத்துக்குடி மாவட்டத்தில் சலூன் கடைகள் மூலம் தொற்று வந்து உள்ளதா, கடை உரிமையாளர், வாடிக்கையாளர், தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. தினசரி கடையை திறந்து அதில் வரும் வருமானம் மூலம்தான் எங்கள் குடும்பத்தினர் பிழைத்து வருகிறோம். கடைகளை மூடினால் நாங்கள் வாழ்வாதாரம் இழந்து பட்டினி சாவு ஏற்படும் நிலை உருவாகும். ஆகையால் சில கட்டுப்பாடுகளுடன் சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும். அனுமதி மறுக்கும் பட்சத்தில் ஒவ்வொரு சலூன் கடைக்காரருக்கும், அதில் வேலை செய்யும் பணியாளர்களுக்கும் தலா ரூ.15 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
மக்காச்சோளம்
மேலக்கரந்தையை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ‘மேலக்கரந்தை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தோம். இதில் கிடைத்த மகசூலை விருதுநகரை சேர்ந்த ஒருவர் கொள்முதல் செய்தார். மொத்தம் 41 விவசாயிகளிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள மக்காச்சோளத்தை கொள்முதல் செய்தார். ஆனால் அதற்கான பணத்தை தரவில்லை. வீட்டுக்கு சென்று கேட்ட போது, கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இது தொடர்பாக போலீசில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகையால் தகுந்த விசாரணை நடத்தி எங்களது பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story