திருப்பூர் மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டன. இதனால் கோவில்கள், தியேட்டர்கள், மற்றும் 6 ஆயிரம் சலூன்கள் மூடப்பட்டன.
திருப்பூர் மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டன. இதனால் கோவில்கள், தியேட்டர்கள், மற்றும் 6 ஆயிரம் சலூன்கள் மூடப்பட்டன.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டன. இதனால் கோவில்கள், தியேட்டர்கள், மற்றும் 6 ஆயிரம் சலூன்கள் மூடப்பட்டன. இதனால் தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்துள்ளனர்.
புதிய கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. அதன்படி சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், பார்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இயங்க தடைவிதிக்கப்பட்டது. வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை. உணவகங்களிலும் மற்றும் தேநீர் கடைகளிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.
கோவில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. மேலும் தினமும் நடைபெறும் பூஜைகள், பிரார்த்தனைகள், சடங்குகளை கோவில் ஊழியர்கள் மூலம் நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
தியேட்டர்கள்
இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் தியேட்டர்கள் அனைத்தும் நேற்று முதல் மூடப்பட்டன. திருப்பூர் மாநகரில் 27 தியேட்டர்கள் உள்ளன. அரசின் புதிய கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் வகையில் திருப்பூர் மாநகரத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் நேற்று முதல் மூடப்பட்டன. இதுபோல் மாவட்டத்தில் 58 தியேட்டர்களும் மூடப்பட்டன. இதனால் தியேட்டர்களில் பணியாற்றும் ஊழியர்கள் வேலை இழப்பை சந்தித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மல்டி பிளக்ஸ் மற்றும் தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியம் கூறும்போது “ அரசின் உத்தரவுக்கு நாங்கள் கட்டுகிறோம். ஆனால் தியேட்டர்களுக்கு மின்சார செலவு, சொத்து வரி செலுத்துவது உள்ளிட்ட எந்தவித சலுகையும் மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கவில்லை. வங்கியில் பெற்ற கடனை கூட தள்ளுபடி செய்யாமல் இருக்கிறார்கள். இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அளவில் தியேட்டரில் 50 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். அவர்கள் வேலையிழப்பை சந்தித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை தியேட்டரில் பணியாற்றும் 12 ஆயிரம் பணியாளர்கள் வேலை இழப்பை சந்தித்துள்ளனர். எனவே அரசு தியேட்டர் உரிமையாளர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும்” என்றார்.
இதுபோல் திருப்பூர் மாநகரில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் உடற்பயிற்சி மேற்கொள்ள வந்திருந்தவர்கள் திரும்பி சென்றனர். பெரிய வணிக வளாகங்கள் மாநகர பகுதியில் அமைந்துள்ளன. இந்த வணிக வளாகங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டதால் அவை மூடப்பட்டன.
சலூன்கள்
திருப்பூர் மாநகராட்சி மற்றும் பல்லடம், தாராபுரம், காங்கேயம், வெள்ளக்கோவில், உடுமலை நகராட்சி பகுதிகளில் உள்ள சலூன்கள், அழகு நிலையங்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன. திருப்பூர் மாநகர பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சலூன்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழகு நிலையங்கள் உள்ளன. இவைகள் அனைத்தும் மூடப்பட்டன.
அதுபோல் மாவட்டம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சலூன்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழகு நிலையங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக 15 ஆயிரம் குடும்பத்தினர் வேலையிழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்தனர்.
வழிபாட்டுத்தலங்கள்
திருப்பூரில் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. ஈஸ்வரன் கோயில், பெருமாள் கோவில், திருப்பூர் திருப்பதி கோவில், கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. கோவில்களில் பூஜை மட்டுமே நடந்தது. அதன் பிறகு கோவில் நடை சாத்தப்பட்டது. இதனால் கோவிலுக்கு வெளியே வாசலில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவினாசி லிங்கேசுவரர் கோவிலின் 3 நுழைவு வாயில்களும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வாயிற்கதவிற்கு வெளியே நின்றே சாமியை கும்பிட்டுவிட்டு சென்றனர்.
இதுபோல் தேவாலயங்கள், பள்ளிவாசல்களிலும் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை. ரம்ஜான் நோன்பு காலமாக இருப்பதால் முஸ்லிம் மக்கள் வீட்டிலேயே தொழுகையே மேற்கொண்டு வருகிறார்கள்.
ஓட்டல்களில் பார்சல்
ஓட்டல்கள், மெஸ்களில் பார்சல் மட்டுமே நேற்று வழங்கப்பட்டது. ஓட்டலில் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படவில்லை. பெரும்பாலான ஓட்டல்களில் முன்புறம் நுழைவாசலில் கயிறு கட்டப்பட்டு வாடிக்கையாளர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. பார்சல் மட்டும் ஊழியர்கள் கடைக்கு வெளியே வந்து கொடுத்தனர். பார்சல் சேவை மட்டுமே வழங்குவதால் ஓட்டல்களில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இதனால் ஓட்டல் தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்துள்ளனர். தனியார் நிறுவனங்கள் மூலம் உணவு பார்சல் சேவை வழக்கம்போல் செயல்பட்டன.
இதுபோல் பேக்கரிகள், டீக்கடைகளில் உட்கார்ந்து டீ குடிக்க அனுமதி இல்லை. பார்சல் வாங்கி சென்றனர். பலர் டீக்கடைக்கு வெளியே நின்று டீ அருந்தி விட்டு புறப்பட்டனர். இதனால் பல கடைகளுக்கு முன்பு கூட்டமாக காணப்பட்டது.
பார்கள்
டாஸ்மாக் பார்களில் செயல்பட தடை விதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான பார்கள் மூடப்பட்டன. இருப்பினும் சில இடங்களில் முறைகேடாக பார்கள் செயல்பட்டன.
Related Tags :
Next Story