கோவில் வாசலில் தீபம் ஏற்றி வழிபட்ட பக்தர்கள்


கோவில் வாசலில் தீபம் ஏற்றி வழிபட்ட பக்தர்கள்
x
தினத்தந்தி 26 April 2021 3:37 PM GMT (Updated: 26 April 2021 3:38 PM GMT)

ஊரடங்கு கட்டுப்பாட்டால் கோவிலுக்குள் செல்ல அனுமதி அளிக்காததால் திண்டுக்கல்லில் கோவில் வாசலில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.

திண்டுக்கல்: 

பக்தர்களுக்கு அனுமதி இல்லை 
தமிழகத்தில் கடந்த 20-ந்தேதி முதல் இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதற்கிடையே கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. 

இதில் கோவில்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

எனினும், வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டன. 

ஆனால், பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் பக்தர்கள் கோவிலுக்குள் வந்து விடாமல் தடுக்க நுழைவுவாயில் பூட்டப்பட்டது.

பழனி முருகன் கோவில்
இதற்கிடையே நேற்று சித்திரை மாத பவுர்ணமி தினம் ஆகும். இந்த பவுர்ணமி நாளில் மக்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். 

இதில் திண்டுக்கல் நகரை பொறுத்தவரை அபிராமி அம்மன் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், வெள்ளைவிநாயகர் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்வார்கள்.

அதிலும் பவுர்ணமி நாளில் கோவில்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் நேற்று கோவிலுக்குள் அனுமதி அளிக்கப்படாத நிலையிலும் பக்தர்கள் வழிபாட்டை நிறுத்தவில்லை. 

மேலும் வழக்கம் போல் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பூட்டி கிடந்த கோவில் வாசலில் கற்பூரம் மற்றும் தீபம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர்.


இதேபோல் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவில், திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தரிசனத்துக்கு பக்தர்கள் நேற்று அனுமதிக்கப்படவில்லை.

 

ஆனால் ஆகம விதிப்படி கோவில்களில் பூஜைகள் நடைபெற்றன. 


இந்த நிலையில் நேற்று சித்ரா பவுர்ணமி என்பதால் வழக்கமாக பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். 

ஆனால் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருகை குறைந்து காணப்பட்டது. 

தீர்த்த காவடியுடன் வந்த பக்தர்கள் 
தீர்த்த காவடியுடன் வந்த பக்தர்கள் பழனி முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள நுழைவு வாயில் முன்பு தேங்காய் உடைத்து, வாழைப்பழம், பொரி, கடலை உள்ளிட்டவற்றை படைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். 


பழனி ரணகாளியம்மன் கோவில், பட்டத்து விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில் உள்பட நகரில் உள்ள பல்வேறு கோவில்களில் நுழைவு வாயிலில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

இதுகுறித்து பக்தர்களிடம் கேட்டபோது, ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமிக்கு பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

எனினும் மொட்டையடித்து நேர்த்தி கடன் செலுத்தி விட்டு, அடிவாரத்தில் வந்து தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி முருகனை வழிபட்டோம் என்றனர்.


Next Story