சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்
வாழ்வாதாரம் பாதிப்படையும் அபாயம் உள்ளதால் மூடப்பட்ட சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று முடிதிருத்தும் தொழிலாளர்கள், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்:
கலெக்டர் அலுவலகத்தில் மனு
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, நேற்று முதல் மாநிலம் முழுவதும் சலூன் கடைகள் மூடப்பட்டன. இதனால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் வருமானமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஏராளமானோர் திரண்டு வந்தனர்.
அப்போது அவர்கள், சலூன் கடைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கும்படி மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், கொரோனா நோய் பரவலை தடுப்பதற்கு ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகளின்படி சலூன் கடைகளை அடைக்கும்படி உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டும் கொரோனா ஊரடங்கின் போது சலூன் கடைகள் அடைக்கப்பட்டன.
இதனால் 6 மாதங்களாக வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டோம்.
இந்த நிலையில் மீண்டும் சலூன் கடைகளை அடைப்பதால் எங்களது வாழ்வாதாரம் மீண்டும் பாதிப்படையும் அபாயம் உள்ளது.
எனவே சலூன் கடைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
பகுதி நேரமாக...
இதேபோல் பழனி வட்ட முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர் மணி, பொருளாளர் காளிதாசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று பழனி சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் கொடுத்த மனுவில், பழனி நகரில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளோம்.
எங்களுக்கு தினசரி கிடைக்கும் வருமானத்தால் பிழைப்பு நடத்தி வருகிறோம்.
தற்போது சலூன் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதால், எங்கள் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே ஒருநாளில் 4-ல் ஒருபகுதி நேரம், அதாவது 6 மணி நேரம் மட்டும் கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும்.
அவ்வாறு அளிக்கும் பட்சத்தில் நாங்கள் முககவசம் அணிந்து, சுகாதாரத்துடன் சலூன் கடைகளை வைத்திருப்போம்.
எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story