பேரம்பாக்கம் பஸ் நிலையம் அருகே கிடப்பில் போடப்பட்ட புதிய கழிப்பறை, குளியலறை கட்டும் பணி விரைந்து முடிக்க பயணிகள் கோரிக்கை
பேரம்பாக்கம் பஸ் நிலையம் அருகே கிடப்பில் போடப்பட்டுள்ள கழிப்பறை கட்டிட பணியை விரைந்து முடிக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து தினந்தோறும் திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, பூந்தமல்லி, காஞ்சீபுரம், சென்னை-திருப்பதி போன்ற பகுதிகளுக்கு 20-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் இயங்கி வருகிறது.
மேலும் பேரம்பாக்கம், சிற்றம்பாக்கம், களாம்பாக்கம், சின்னமண்டலி, இருளஞ்சேரி, கூவம் போன்ற சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெளிப்பகுதிக்கு செல்ல வேண்டுமானால் பேரம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து தான் பஸ் மூலம் செல்ல வேண்டும். இதன் காரணமாக பேரம்பாக்கம் பஸ்நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
இதைத்தொடர்ந்து பஸ்பயணிகளின் நலனுக்காக அங்கு பஸ்நிலையம் அருகே அப்போதைய திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ. கோ.அரி, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 2010-2011 ஆம் நிதி ஆண்டில் ரூ.6 லட்சம் மதிப்பில் நவீன கழிப்பறை மற்றும் குளியலறை கட்டிடம் கட்டப்பட்டது.
இந்த கட்டிடமானது தற்போது ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு பழுதடைந்தது. இதனை அகற்றிவிட்டு புதிய கழிப்பறை மற்றும் குளியலறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பணியானது கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக வெளி ஊரிலிருந்து பேரம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு வரும் இளம் பெண்கள், வயதான முதியவர்கள், பயணிகள் அனைவரும் இயற்கை உபாதையை கழிக்கவும், கழிவறையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்
எனவே பேரம்பாக்கம் பஸ்நிலையம் அருகே கிடப்பில் கிடக்கும் கழிப்பறை கட்டிடத்தை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story