பொள்ளாச்சியில் நடமாடும் கொரோனா பரிசோதனை முகாம்


பொள்ளாச்சியில் நடமாடும் கொரோனா பரிசோதனை முகாம்
x
தினத்தந்தி 26 April 2021 5:05 PM GMT (Updated: 26 April 2021 5:05 PM GMT)

சப்-கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். மேலும் பொள்ளாச்சியில் நடமாடும் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்படும் என்று சப்-கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்தார்.

பொள்ளாச்சி

சப்-கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். மேலும் பொள்ளாச்சியில் நடமாடும் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்படும் என்று சப்-கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் வைத்திநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க கிருமி நாசினி மருந்து தெளித்தல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். சப்-கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்படும். 

கொரோனா அறிகுறி உள்ள நபர்கள் தகவல் தெரிவித்தால் பரிசோதனை செய்யப்படும். இதற்காக பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் நடமாடும் கொரோனா பரிசோனை முகாம் நடத்தப்படும். 

மேலும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வசதிகள் இருந்தால் அனுமதிக்கலாம். அதே நேரத்தில் 50 வீட்டிற்கு ஒருவரை நியமித்து காலை, மாலை நேரங்களில் கண்காணிக்க வேண்டும்.

கண்காணிப்பு

தொந்தரவுகள் இருந்தால் மட்டும் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கலாம். இல்லையெனில் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்க வேண்டும். 

தமிழக-கேரள எல்லைகளில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளையும் கண்காணிக்க வேண்டும். இணைப்பு சாலைகளை தடுப்புகள் வைத்து அடைக்க வேண்டும். 

அதிகாரிகள் தொற்று பாதித்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்.

விருப்பமுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும். கொரோனா தடுப்பூசி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தாசில்தார்கள் ஸ்ரீதேவி, வெங்கடாச்சலம், தணிகவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story