ஒடுகத்தூர் அருகே நிலத்தில் மாடு மேய்ந்ததை தட்டிக்கேட்ட முதியவர் அடித்துக்கொலை.


ஒடுகத்தூர் அருகே நிலத்தில் மாடு மேய்ந்ததை தட்டிக்கேட்ட முதியவர் அடித்துக்கொலை.
x
தினத்தந்தி 26 April 2021 10:41 PM IST (Updated: 26 April 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

ஒடுகத்தூர் அருகே நிலத்தில் மாடு மேய்ந்ததை தட்டிக்கேட்டவர் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

அணைக்கட்டு

முன்விரோதம்

அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த மேல் அரசம்பட்டு தீர்த்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 70). இவருக்கு சொந்தமான நிலம் தீர்த்தமலை அடிவாரத்தில் உள்ளது. அதே பகுதியில் வசித்து வருபவர் இவரது உறவினரான சுப்பிரமணி (65). இவருக்கு சொந்தமான நிலமும் ஈஸ்வரன் நிலத்திற்கு அருகிலேயே உள்ளது. 

சுப்பிரமணி தனது நிலத்திற்கு மாடுகளை ஓட்டிச்செல்ல வேண்டுமென்றால், ஈஸ்வரன் நிலத்தின் வழியாகத்தான் ஓட்டிச் செல்ல வேண்டும். இதனால் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

அடித்துக் கொலை

இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் சுப்பிரமணி தனது மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள ஈஸ்வரன் நிலத்தில் மாடுகள் இறங்கி அவர் பயிரிட்டு இருந்த வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்ததாக கூறப்படுகிறது.

இதை பார்த்த ஈஸ்வரன் மற்றும் அவரது மகன் வடிவேல் ஆகியோர் சுப்பிரமணியை தட்டிக் கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியது. அப்போது இதனையடுத்து சுப்பிரமணி மற்றும் உறவினர்கள் உருட்டுக் கட்டையால், ஈஸ்வரனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் மயங்கி விழுந்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

 தடுக்க வந்த அவரது மகன் வடிவேலையும் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து வடிவேல் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

விவசாயி கைது

அதன் பேரில் வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி   ஈஸ்வரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தனர். இதுதொடர்பாக அவரது உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story