கொரோனா புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது: 1,800 கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு


கொரோனா புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது: 1,800 கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 26 April 2021 10:43 PM IST (Updated: 26 April 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததை அடுத்து, கடலூர் மாவட்டத்தில் 1,800 சிறிய, பெரிய கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

கடலூர், 
 
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இது தவிர புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் அறிவித்தது. இந்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

இந்த புதிய கட்டுப்பாடுகளில் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும், இருப்பினும் கோவில் பணியாளர்கள் மூலம் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட விழாக்கள் மாவட்ட கலெக்டர் அனுமதி பெற்று, குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டது.

பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

இந்நிலையில் இந்த புதிய கட்டுப்பாடுகள் கடலூர் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

சில கோவில்களில் வெளிப்புற கதவுகள் மூடப்பட்டன. இருப்பினும் கோவில் பூசாரிகள், குருக்கள் மூலம் வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. இதில் கோவில் பணியாளர்கள் மட்டும் பங்கேற்றனர். இது பற்றி இந்து சமய அறிநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் 1800 சிறிய மற்றும் பெரிய கோவில்கள் உள்ளன. 

இந்த கோவில்களில் பக்தர்கள் சென்று வழிபட தடை விதிக்கப் பட்டது. இருப்பினும் கோவில் பணியாளர்கள் மூலம் சாமிக்கு வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகிறது.

கிருமி நாசினி தெளிப்பு

முன்னதாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கோவிலுக்குள் செல்லும் பணியாளர்களும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 

பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கோவிலுக்குள் வெளியில் அறிவிப்பு பலகை வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் கோவில்களில் திருமணம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. சித்திரை பெருவிழா போன்ற விழாக்கள் நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது என்றார்.

நடராஜர் கோவில்

மேலும் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் நான்கு சன்னதி கோபுர வாசலில், தெற்கு, மேற்கு, வடக்கு  கோபுர வாயில்கள் மூடப்பட்டது. கிழக்குவீதி கோபுர வாசல் மட்டும் திறந்துள்ளது. அதன் வழியாக குறைந்த அளவிலான  தீட்சிதர்கள் மட்டும் சென்று 6 கால பூஜையை செய்து வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தீட்சிதர்கள் தரப்பில் கூறுகையில், நடராஜருக்கு தினசரி 6 கால பூஜை நடைபெறும், பொதுமக்கள், பக்தர்களுக்கு நடராஜரை தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்று தெரிவித்தனர்.

திருவந்திபுரம்

இதற்கிடையே திருவந்திபுரம் தேவநாத சாமி கோவிலில், நேற்று 2-வது நாளாக 20-க்கும் மேற்பட்ட மணமக்கள் கோவில் முன்பு வந்து நடுரோட்டில் நின்றபடி திருமணம் செய்துக்கொண்டு, கோபுர தரிசனம் செய்து சென்றனர்.  
கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற போதிலும், ஏராளமான பக்தர்கள் அங்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story