கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு
கடலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்தார்.
கடலூர்,
தமிழக சட்டசபைக்கான தேர்தல் கடந்த 6-ந் தேதி நடந்தது. இதில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், விருத்தாசலம், கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி ஆகிய 9 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 8 லட்சத்து 5 ஆயிரத்து 415 ஆண்களும், 8 லட்சத்து 42 ஆயிரத்து 909 பெண்களும், 88 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 16 லட்சத்து 48 ஆயிரத்து 412 பேர் வாக்களித்துள்ளனர்.
தேர்தல் முடிந்ததும் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியிலும், புவனகிரி, காட்டுமன்னார்கோவில்,
சிதம்பரம் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் சி.முட்லூர் அரசு கல்லூரியிலும், திட்டக்குடி, விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியிலும்,
பண்ருட்டி, நெய்வேலி தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
126 மேஜைகள்
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் வீதம் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு மொத்தம் 126 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் பணிக்காக 17 கண்காணிப்பாளர்கள், 17 உதவியாளர்கள் மற்றும் 17 நுண் பார்வையாளர்கள் என 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 153 கண்காணிப்பாளர்கள், 153 உதவியாளர்கள், 153 நுண் பார்வையாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்த நிலையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு கணிணி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
பணி ஒதுக்கீடு
நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். பின்னர் அவர் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள 153 கண்காணிப்பாளர்கள், 153 உதவியாளர்கள், 153 நுண் பார்வையாளர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, தேர்தல் தாசில்தார் பாலமுருகன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story