கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் கூடுதலாக 200 படுக்கை வசதி கலெக்டர் கிரண்குராலா ஆய்வு


கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் கூடுதலாக 200 படுக்கை வசதி  கலெக்டர் கிரண்குராலா ஆய்வு
x
தினத்தந்தி 26 April 2021 10:53 PM IST (Updated: 26 April 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 200 படுக்கை வசதி அமைக்கும் பணியை கலெக்டர் கிரண்குரலா ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி


608 பேருக்கு சிகிச்சை

தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தற்போது மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியது. இவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 608 பேர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சைபெற்று வருகின்றனர். 

கூடுதலாக 200 படுக்கைகள்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே 250 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் வென்டிலேட்டர் வசதியுடன் 20 படுக்கைகளும், ஆக்சிஜன் வசதியுடன் 230 படுக்கைகளும் உள்ளன. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிறுவங்கூர் சமத்துவபுரம் அருகில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கட்டிடம் கட்டும் வளாகத்தில் ஏற்கனவே அரசு கலைக் கல்லூரி இயங்கி வந்த கட்டிடத்தில் கூடுதலாக 200 படுக்கை வசதிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் அமைக்கப்படுகிறது. இங்கு சிப்ட் முறையில் 16 டாக்டர்கள் சிகிச்சை அளிக்க உள்ளனர். 

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் கூடுதல் படுக்கை வசதி அமைக்கும் பணியை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா நேரில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? என ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்த மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சதீஸ்குமார், அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு, டாக்டர் செந்தில்குமார் ஆகியோரிடம் கொரோனா சிகிச்சை அளிப்பது சம்பந்தமாக ஆலோசனை வழங்கினார். அப்போது டாக்டர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.

Next Story