தியாகதுருகம் அருகே சாராயம் விற்பனையை கண்டித்து இளைஞர்கள் சாலை மறியல்


தியாகதுருகம் அருகே சாராயம் விற்பனையை கண்டித்து இளைஞர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 April 2021 5:41 PM GMT (Updated: 26 April 2021 5:41 PM GMT)

தியாகதுருகம் அருகே சாராயம் விற்பனையை கண்டித்து இளைஞர்கள் சாலை மறியல்

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே பொரசக்குறிச்சி கிராமத்தில் உள்ள சுடுகாட்டு பகுதியில் டியூப்பில் சாராயம் இருப்பதாக அப்பகுதி இளைஞர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் சுடுகாட்டு பகுதிக்கு சென்று அங்கு டியூப் பில் இருந்த சாராயத்தை எடுத்துக்கொண்டு கள்ளக்குறிச்சி-அடரி சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு வந்தனர். அங்கு நடுரோட்டில் டியூப்பில் இருந்த சாராயத்தை பேரலில் ஊற்றி முககவசம் அணிந்து இளைஞர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி ஆகியோர் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாராயம் விற்பனை தொடர்பாக பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என போலீசாரிடம் இளைஞர்கள் தெரிவித்தனர். இதை அடுத்து சாராயம் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து இளைஞர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.  

இந்த நிலையில் சுடுகாட்டு பகுதியில் விற்பனைக்காக சாராயத்தை டியூபில் பதுக்கி வைத்த பொரசக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மருதை(வயது 73) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.  


Next Story