கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாறிய கல்லூரி


கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாறிய கல்லூரி
x
தினத்தந்தி 27 April 2021 12:05 AM IST (Updated: 27 April 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடியில் கல்லூரி கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது.

பரமக்குடி, 
பரமக்குடியில் கல்லூரி கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது.
ஆய்வு
பரமக்குடி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார். அப்போது பரமக்குடி பஸ் நிலையத்தில் தீயணைப்பு துறை ஒருங்கிணைப்புடன் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 
 பரமக்குடி வேந்தோணி கால்வாய் அருகில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக கூடுதல் படுக்கை வசதிகளுடன் அந்த கல்லூரியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுஉள்ளது. அந்த கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை பார்வையிட்டு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் ஆலோசனைகளை வழங்கினார். 
மேலும் அந்த மையத்தில் தங்க வைக்கப்படும் கொரோனா நோயாளிக்கு போதுமான குடிநீர், சத்தான உணவு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆலோசனை
 அதைத்தொடர்ந்து பரமக்குடி அருகே உள்ள அண்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட செந்தமிழ் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பு அமைக்கப்பட்டு கட்டுப் பாடு பகுதியாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 
அப்போது சுகாதாரத்துறை துணை இயக்குனர் இந்திரா, பரமக்குடி நகராட்சி ஆணையாளர் செந்தில்குமரன், தாசில்தார் தமீம்ராஜா, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் செந்தாமரைச் செல்வி, ராஜேந்திரன் உள்பட அலுவலர்கள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story