புதுக்கோட்டை அருகே பயங்கரம்: பழிக்குப்பழியாக வாலிபர் வெட்டிக்கொலை ஜாமீனில் வந்த தம்பிக்கும் அரிவாள் வெட்டு


புதுக்கோட்டை அருகே பயங்கரம்: பழிக்குப்பழியாக வாலிபர் வெட்டிக்கொலை   ஜாமீனில் வந்த தம்பிக்கும் அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 27 April 2021 12:40 AM IST (Updated: 27 April 2021 12:40 AM IST)
t-max-icont-min-icon

பழிக்குப்பழியாக வாலிபர் வெட்டிக்கொலை

புதுக்கோட்டை:
கொலை வழக்கில் ஆஜர்
புதுக்கோட்டை பூலாங்குறிச்சி அருகே உள்ள செவலூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னையா (வயது 24). இவர் பொக்லைன் எந்திர ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த 2019-ம் ஆண்டு மணமேல்குடி பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவரை முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக பொன்னையா கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார். 
இந்த வழக்கு புதுக்கோட்டை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த பொன்னையா நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு நேற்று மதியம் தனது அண்ணன் விஜயகுமாருடன் (27) தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இருவரும் செல்லுகுடி விளக்கு சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரையும் வழி மறித்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்ட தொடங்கினர். இதில் அரிவாள் வெட்டுடன் பொன்னையா வயலில் இறங்கி தப்பி ஓடிவிட்டார்.
வாலிபர் வெட்டிக்கொலை
ஆனால் மர்ம நபர்களிடம் விஜயகுமார் வசமாக சிக்கிக் கொண்டார். இதையடுத்து மர்மநபர்கள் பழைய முன்விரோதத்தை வைத்து அவரை கழுத்து, நெஞ்சு, தலை ஆகிய இடங்களில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்தம் சொட்ட,சொட்ட சம்பவ இடத்திலேயே விஜயகுமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே தப்பி ஓடிய பொன்னையா மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட தனது அண்ணன் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனையடுத்து போலீசார் விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த சம்பவம் குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பழிக்குப்பழியாக 
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பொன்னையா 2019-ம் ஆண்டு மணமேல்குடியை சேர்ந்த இசக்கிமுத்துவை வெட்டிக்கொலை செய்ததற்கு பழிக்குப்பழி வாங்கும் வகையாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. வெட்டிக்கொலை செய்யப்பட்ட விஜயகுமார் சிங்கப்பூரில் 2 ஆண்டுகள் வேலை பார்த்து விட்டு சமீபத்தில்தான் ஊருக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
புதுக்கோட்டையில் பழிக்குப்பழியாக வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story