கர்நாடகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி


மந்திரி சுதாகர்.
x
மந்திரி சுதாகர்.
தினத்தந்தி 27 April 2021 1:18 AM IST (Updated: 27 April 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

கா்நாடகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

பெங்களூரு: கா்நாடகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பீதி அடைய தேவை இல்லை

கர்நாடகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 85 சதவீதம் பேருக்கு எந்த விதமான நோய் அறிகுறியும் இருப்பது இல்லை. 15 சதவீதம் பேருக்கு மட்டுமே மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால் நோய் பாதிப்பு உறுதியான உடனேயே ஆக்சிஜன், ரெம்டெசிவர் மருந்து கேட்டு மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். மருத்துவ சிகிச்சை அவசியம் தேவை உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனைக்கு வர வேண்டும்.

சிகிச்சை யாருக்கு தேவையோ அவர்களுக்கு மருத்துவமனையில் படுக்கை கிடைக்க வாய்ப்பு வழங்க வேண்டும். பெங்களூருவில் அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். பெங்களூருவில் பாதிப்பு அதிகமாக உள்ளதால் நான் இங்கு அதிக கவனம் செலுத்தி வருகிறேன். கொரோனா பாதிப்பு உறுதியான உடனேயே யாரும் பீதி அடைய தேவை இல்லை. ஆக்சிஜன் அளவு குறைந்தால் மட்டுமே கவலைப்பட வேண்டும். உடனே மருத்துவமனைக்கு வர வேண்டும்.

50 சதவீத படுக்கைகள்

வீட்டு தனிமையில் இருப்பவர்கள் அரசு அறிவுறுத்தும் மருந்து-மாத்திரைகளை எடுக்கலாம். உடல்நிலையை சரியான முறையில் கண்காணிக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மாத்திரைகளையும் வழங்குகிறோம். வெண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். மூச்சு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம்.

இதற்காக ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தடுப்பூசி கடைசி ஆயுதம். அடுத்தடுத்த கொரோனா அலைகள் வரலாம். அதை தடுக்க வேண்டுமென்றால் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை அரசு உறுதி செய்யும். தனியார் மருத்துவமனைகள் 50 சதவீத படுக்கைகளை வழங்க ஒப்புக் கொண்டுள்ளன.

தடுப்பூசி போடும் பணி

இதுவரை அந்த மருத்துவமனைகள் 3,500 படுக்கைகளை வழங்கியுள்ளன. இன்னும் 1,000 படுக்கைகளை வழங்குவதாக உறுதி அளித்துள்ளன. அந்த படுக்கைகளை பெற நடவடிக்கை எடுக்கப்படும். முழு ஊரடங்கை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. ஊரடங்கு காலத்தில் தடுப்பூசி போடும் பணி நடைபெறாது.
இவ்வாறு சுதாகர் கூறினார்.

Next Story