எனது எதிரிக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்பட கூடாது; வைரஸ் தொற்றில் இருந்து மீண்ட லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ. பேட்டி
எனது எதிரிக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்பட கூடாது என்று கடவுளிடம் வேண்டி கொள்வேன் என்று லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
பெங்களூரு: எனது எதிரிக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்பட கூடாது என்று கடவுளிடம் வேண்டி கொள்வேன் என்று லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ.
பெலகாவி புறநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருபவர் லட்சுமி ஹெப்பால்கர். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு உறுதியானது. இவருடன் தொடர்பில் இருந்த சகோதரர் மற்றும் வீட்டு வேலைக்காரர்கள், பாதுகாப்பு போலீஸ்காரர் உள்பட 18 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் பெலகாவியில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து லட்சுமி ஹெப்பால்கர் உள்பட 18 பேரும் மீண்டு இருந்தனர். இதனால் நேற்று அவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ. கைகூப்பி நன்றி தெரிவித்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:-
கடவுளிடம் வேண்டுவேன்
கடவுள் ஆசிர்வாதத்தால் நான் உள்பட 18 பேரும் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளோம். இந்த வைரசின் தாக்கம் எவ்வளவு வீரியமானது என்று புரிந்து கொண்டேன். அலட்சியமாக இருந்ததால் எனக்கு கொரோனா பாதிப்பு உண்டானது. கொரோனா 2-வது அலை தாக்கம் பயங்கரமாக உள்ளது. இது எப்படி இவ்வளவு வீரியமாக உள்ளது என்று தெரியவில்லை. கொரோனாவிடம் இருந்து தப்பிக்க மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.
சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்களை நாம் கடவுளாக பார்க்க வேண்டும். எனது எதிரிக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்பட கூடாது என்று கடவுளிடம் வேண்டி கொள்வேன்.
இவ்வாறு லட்சுமி ஹெப்பால்கர் கூறினார்.
Related Tags :
Next Story