மதுரையில் கொரோனாவுக்கு மூதாட்டி உள்பட 4 பேர் பலியாகினர்
மதுரையில் கொரோனாவுக்கு 4 பேர் பலி
மதுரை
மதுரையில் கொரோனாவுக்கு மூதாட்டி உள்பட 4 பேர் பலியாகினர். இதுபோல், புதிதாக 524 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ்
மதுரையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. அதில் நேற்று ஒரே நாளில் 524 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று 7 ஆயிரத்து 323 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தான் 524 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 320 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 28 ஆயிரத்து 460 ஆக உயர்ந்துள்ளது.
இதுபோல், நேற்று 311 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 220 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம், இதுவரை 24 ஆயித்து 31 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போது, சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 3929 ஆக உயர்ந்துள்ளது.
4 பேர் உயிரிழப்பு
மதுரையில் கடந்த சில தினங்களாக உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வரிசையில் நேற்றும் 4 பேர் உயிரிழந்தனர். 59 வயது ஆண், 81 வயது மூதாட்டி, 54 வயது ஆண், 80 வயது முதியவர் என 4 பேர் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். அரசு ஆஸ்பத்திரியை காட்டிலும் கடந்த சில தினங்களாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது. மதுரையில் நேற்றுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா பரிசோதனையும் அதிக அளவில் செய்யப்படுகிறது.
நேற்றைய நிலவரப்படி, 9 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதுபோல், கொரோனா தடுப்பூசி போடும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதன்படி, நேற்று ஒரே நாளில் 4543 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதன் மூலம் மதுரையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 7 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சை
மதுரையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 3929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 1030 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 411 பேர் கண்காணிப்பு மையங்களிலும், 1266 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலிலும், மீதமுள்ளவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோல், வெளிமாவட்டத்தை சேர்ந்த 347 பேரும் மதுரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story