கோலார் அரசு ஆஸ்பத்திரியில் முனிசாமி எம்.பி. திடீர் ஆய்வு; ஆக்சிஜன் இருப்பு குறித்து கேட்டறிந்தார்
கோலார் அரசு ஆஸ்பத்திரியில் முனிசாமி எம்.பி. திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் ஆக்சிஜன் இருப்பு குறித்து மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
கோலார்: கோலார் அரசு ஆஸ்பத்திரியில் முனிசாமி எம்.பி. திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் ஆக்சிஜன் இருப்பு குறித்து மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
கோலார் அரசு ஆஸ்பத்திரி
கோலார் எம்.பி. முனிசாமி நேற்று மாவட்ட அரசு எஸ்.என்.ஆர். ஆஸ்பத்திரிக்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், கொரோனா நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரியில் அளித்து வரும் வசதிகள், சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்.
மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதாகவும், இதனால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன்காரணமாக முனிசாமி எம்.பி., கோலார் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆக்சிஜன் குடோனுக்கு சென்றார். அங்கு ஆக்சிஜன் சிலிண்டர் கையிருப்பு உள்ளது குறித்த விவரங்களை குடோன் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ரெம்டெசிவர் மருந்து...
ஆய்வுக்கு பின் முனிசாமி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோலார் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தும் ஆக்சிஜன் சிலிண்டரை தனியார் நிறுவனம் ஒன்று உற்பத்தி செய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் ஒரு நிறுவனம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 10 நாட்களுக்குள் அமைக்கப்பட்டுவிடும்.
கொரோனா பாதித்தவர்களுக்கு 8 முதல் 10 நாட்கள் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், மற்ற நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ரெம்டெசிவர் மருந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வருகின்றன.
பணி இடமாற்றம்
முறைகேடாக ரெம்டெசிவர் மருந்து விற்கப்பட்டால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விவகாரத்தில் குளறுபடிகளோ அல்லது ஏற்றத்தாழ்வுகளோ நிகழ்ந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் உடனடியாக பணி இடமாற்றம் செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story