கொரோனா பரவலை தடுப்பது குறித்து பிரதமர் மோடிக்கு, தேவேகவுடா கடிதம்
கொரோனா பரவலை தடுப்பது குறித்து பிரதமர் மோடிக்கு, தேவேகவுடா கடிதம் எழுதி உள்ளார்.
பெங்களூரு: கொரோனா பரவலை தடுப்பது குறித்து பிரதமர் மோடிக்கு, தேவேகவுடா கடிதம் எழுதி உள்ளார்.
பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
சுகாதார நிர்வாகம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதற்கு எதிராக நமது நாடு போராடி வருகிறது. இதை தடுக்க நீங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். சுகாதார நிர்வாகம் மற்றும் கொரோனா வைரஸ் நிர்வாக அதிகாரத்தை பரவலாக்க வேண்டும். நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.
இந்த அதிகாரத்தை அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்க வேண்டும்.
கொரோனா குறித்த போர் அலுவலகம் மாநில அளவில் மட்டும் செயல்பட்டால் போதாது. ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் இத்தகைய போர் அலுவலகங்களை திறக்க வேண்டும். கொரோனா முற்றிலுமாக குறைந்த பிறகே அவற்றை ரத்து செய்ய வேண்டும். மத்திய-மாநில அரசுகளின் கவனம் முழுவதும் பெரிய நகரங்கள் மீதே உள்ளது.
மிகப்பெரிய ஆபத்து
இதனால் சிறிய நகரங்கள், தாலுகா தலைநகரங்களில் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. கிராமங்களில் கொரோனா பரவத்தொடங்கியுள்ளது. இதன் மீதும் அரசு கவனம் செலுத்த வேண்டும். இந்த சுகாதார நெருக்கடியை சமாளிக்க அனைத்து துறை ஊழியர்களும் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் வைரஸ் தாக்குகிறது. இது நம்மை பாதுகாக்க மட்டுமே உதவும் என்பதை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கொரோனா தடுப்பூசி குறித்த நேர்மறையான தகவல்களை மக்களுக்கு அரசு வழங்க வேண்டும். இதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மாநில அரசிடம் தடுப்பூசி போதுமான அளவுக்கு இருப்பு இருந்தால், பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள காலக்கெடு நிர்ணயம் செய்யலாம். தடுப்பூசி விரைவாக சென்றடைய மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய பொறுப்பு வழங்க வேண்டும்.
வாழ்க்கை காப்பீடு
தடுப்பூசிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை குறித்து அதிகளவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. விலை நிர்ணயிக்கும்போது ஏழை மக்களை நினைவில் கொள்ள வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க அரசு முடிவு செய்தால், அது மிகப்பெரிய மனிதநேய செயலாக இருக்கும். இந்த விஷயத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.
ஏழைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் விஷயத்தில் அடையாள அட்டையை கேட்பது போன்ற அனைத்து தடைகளையும் நீக்க வேண்டும். படிப்பறிவற்ற ஏழை மக்களுக:கு, இணையதளத்தில் எவ்வாறு தங்களின் பெயர் விவரங்களை பதிவு செய்வது என்பது தெரியாது. இது அந்த மக்களுக்கு தடையாக அமைந்துவிடக்கூடாது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபடும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு வாழ்க்கை காப்பீடு வசதி செய்து கொடுக்கப்பட்டது. அது ரத்து செய்யப்பட்டுள்ளது சரியல்ல. அந்த காப்பீட்டு வசதியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்.
தலா ஒருவருக்கு வேலை
அரசு துறைகளில் பணியாற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சம்பளத்துடன் 3 மாதங்கள் விடுமுறை வழங்க வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு மேல் படிப்புக்கான நுழைவு தேர்வில் ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும். கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டு உயிரிழந்த மருத்துவ ஊழியர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
அனைத்து நோக்கத்திற்காகவும் அடுத்த 6 மாதங்களுக்கு மக்கள் ஒரு இடத்தில் கூடுவதை தடை செய்ய வேண்டும். 5 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது வெற்றி கொண்டாட்டத்தை அனுமதிக்கக்கூடாது. அனைத்து வகையான தேர்தல்களையும் அடுத்த 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும். அனைத்து வசதிகளுடன் கூடிய தடுப்பூசி உற்பத்தி மையங்களை வட இந்தியா, தென்இந்தியாவில் தலா ஒன்று அமைக்க வேண்டும்.
நிதி ஒதுக்கீடு
தொலைநோக்கு பார்வையுடன் சுகாதார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரத்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த நோக்கத்தில் நாம் ஈடுபாட்டு உணர்வுடன் செயலாற்ற வேண்டியது அவசியம்.
இவ்வாறு தேவேகவுடா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story