வேலை நேரம் குறைப்பு: வங்கிகளில் வாடிக்கையாளர்கள் குவிந்தனர்


வேலை நேரம் குறைப்பு: வங்கிகளில் வாடிக்கையாளர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 27 April 2021 4:14 AM IST (Updated: 27 April 2021 4:15 AM IST)
t-max-icont-min-icon

வேலைநேரம் குறைக்கப்பட்டதால் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.

ஈரோடு,

வேலைநேரம் குறைக்கப்பட்டதால் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.

வங்கிகளில் கூட்டம் 

தமிழ்நாட்டில் நேற்று முதல் வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும் என்று அறவிக்கப்பட்டு இருந்தது.
இதனால் நேற்று வங்கிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள இந்தியன் வங்கி மெயின் கிளையில் ஏராளமானவர்கள் குவிந்தனர். வங்கியின் உள்ளே தனிமனித இடைவெளியை பின்பற்றும் வகையில் குறைந்த நபர்களே அனுமதிக்கப்பட்டதால், ஒருவர் பின் ஒருவராக உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனால் வங்கியின் வெளியே வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். இதுபோல் பல்வேறு வங்கிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

பரிவர்த்தனை

இதுபற்றி சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-

கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்தநிலையில் அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அதன்படி வங்கி நேரத்தை குறைத்து அரசு அறிவித்து இருக்கிறது. வங்கிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் அதிகாரிகள் இதுபோன்று அறிவித்து இருக்கிறார்கள். ஆனால், நேரம் குறைக்கப்பட்டதால் கூட்டம் அதிகமாகி இருக்கிறது என்பதே உண்மை. வழக்கமாக வங்கி அதிகாரிகள் காலை 10 மணிக்கு முன்பே வந்து இரவு 7 மணிவரையும் வங்கிகளில் வேலை செய்கிறார்கள். பெரும்பாலான வங்கிகளில் மதியம் 2 மணி வரைதான் பொதுமக்களுக்கான பரிவர்த்தனைகள் நடக்கிறது.

தெளிவான முடிவு

தற்போது வங்கி நேரம் குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், வங்கி பணியாளர்களும் அதிகாரிகளும் வழக்கம்போல இரவு 7 மணி வரை தங்கள் அன்றாட பணிகளை செய்ய வேண்டியது இருக்கிறது. எனவே நேரம் குறைப்பு என்பதற்கு பதிலாக மாலைவரை பொதுமக்களுக்கான பரிவர்த்தனைகள் நடைபெறும் என்றும் பொதுமக்கள் நெருக்கிக்கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிவித்து இருந்தால் பொதுமக்கள் இப்படி வந்து குவிய மாட்டார்கள்.

ஆனால், வங்கி அரைநாள் என்று நேரம் குறைக்கப்பட்டதாலும், எதிர்பாராமல் வங்கிகள் இயங்காது என்று அறிவிப்பு வந்து விடுமோ என்றும் அச்சத்தில் ஏராளமானவர்கள் வங்கிகளை நோக்கி படை எடுக்கிறார்கள். எனவே இந்த விஷயத்தில் அதிகாரிகள் தெளிவான முடிவு எடுக்காவிட்டால், கொரோனா பரவலுக்கு வங்கிகளில் வரும் கூட்டம் காரணமாகி விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story