கொரோனா தொற்று வந்தால் என்ன செய்வது?- மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் விளக்கம்


கொரோனா தொற்று வந்தால் என்ன செய்வது?- மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் விளக்கம்
x
தினத்தந்தி 27 April 2021 4:16 AM IST (Updated: 27 April 2021 4:17 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று வந்தால் என்ன செய்வது என்று மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் விளக்கம் அளித்து உள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் மூலம் உருவாகும் கோவிட்-19 நோய் பாதிப்பு குறித்து பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு அடைய வேண்டும். தேவையற்ற அச்சம் அடைந்து உடல் நலம் பாதிப்பை தீவிரப்படுத்த வேண்டாம்.
கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே பதற்றம் அடைய வேண்டாம். அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக வேண்டும். அங்கு பாதிப்பு குறித்து பரிசோதனை செய்யப்படும். அரசு ஆஸ்பத்திரிகள் இல்லாவிட்டால் சிறப்பு காய்ச்சல் முகாமுக்கும் சென்று பரிசோதனை செய்யலாம். பின்னர் பரிசோதனை முடிவுகள் வரும் வரை தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். எங்கும் வெளியே சென்று யாரையும் சந்திக்க வேண்டாம்.

ஒத்துழைப்பு

இந்த பரிசோதனையில் கோவிட்-19 தொற்று உறுதி என்று முடிவு வந்தால் அதைப்பற்றி பெரும் அச்சமோ, பதற்றமோ அடைய வேண்டியது இல்லை. சுகாதாரத்துறை ஊழியர்கள் தொற்று கண்டறியப்பட்டவரை தொடர்பு கொள்வார்கள். அவர்களே சம்பந்தப்பட்டவர்களை கொரோனா பரிசோதனை மையங்களுக்கு அழைத்துச்செல்வார்கள். சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு தொற்று பாதித்தவர் மற்றும் அவரது குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அடிப்படை பரிசோதனைகள் முடிந்த பிறகு கொரோனா பாதிப்பு அதாவது கோவிட் -19 தாக்கம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது என்பதை டாக்டர்கள் கண்டறிந்து அதற்கு ஏற்ற சிகிச்சை முறையை பரிந்துரை செய்வார்கள். லேசான தொற்றாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அப்போதும் சுகாதாரத்துறை ஊழியர்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்து உடல்நலம் குறித்து கேட்டு அறிவார்கள். லேசான தொற்று இருந்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட முடியாதவர்கள் அருகில் உள்ள கொரோனா பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அங்கு சுகாதாரப்பணியாளர்களின் நேரடி கண்காணிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.

உதவி

தீவிர தொற்று கண்டறியப்பட்டால் அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய சிகிச்சை அளித்து குணமாக்கப்படுவார்கள்.
எனவே கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சமோ பீதியோ அடைய வேண்டாம். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் கேட்கவும், அவசர உதவிகள் செய்யவும் உதவி எண்களாக 0424 2260211, 77087 22659, 94999 33872 ஆகிய தொலைபேசி மற்றும் செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த எண்களை தொடர்பு கொண்டால் சுகாதாரத்துறை உதவிக்குழு தேவையான உதவிகளை செய்வார்கள். அடுத்தக்கட்ட சிகிச்சைக்கும் அவர்கள் வழிகாட்டுவார்கள். கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தனிமனித இடைவெளி, முகக்கவசம், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் என சுகாதாரத்துறை அறிவித்து உள்ள நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் கூறி உள்ளார்.

Next Story