கொடுமுடி, அந்தியூர், சத்தியமங்கலம் பகுதியில் கொரோனா விதிமுறையை மீறிய உணவகம், பேக்கரி-எலக்ட்ரிக்கல் கடைக்கு சீல்


கொடுமுடி, அந்தியூர், சத்தியமங்கலம் பகுதியில் கொரோனா விதிமுறையை மீறிய உணவகம், பேக்கரி-எலக்ட்ரிக்கல் கடைக்கு சீல்
x
தினத்தந்தி 27 April 2021 4:50 AM IST (Updated: 27 April 2021 4:51 AM IST)
t-max-icont-min-icon

கொடுமுடி, அந்தியூர், சத்தியமங்கலம் பகுதியில் கொரோனா விதிமுறையை மீறிய உணவகம், பேக்கரி மற்றும் எலக்ட்ரிக்கல் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஈரோடு,

கொடுமுடி, அந்தியூர், சத்தியமங்கலம் பகுதியில் கொரோனா விதிமுறையை மீறிய உணவகம், பேக்கரி மற்றும் எலக்ட்ரிக்கல் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கொடுமுடி
கொரோனா 2-வது அலை பரவலை தடுக்க தமிழக அரசு நேற்று முதல் புதிய பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி டீக்கடை மற்றும் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. பார்சல் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு்ள்ளது.
இதனைத்தொடர்ந்து கொடுமுடி பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகாந்த் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் நேற்று கொடுமுடி புதிய பஸ் நிலையத்தில் உள்ள தனியார் உணவகம் மற்றும் பேக்கரியில் சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது அங்கு டீ விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்ததை பார்த்தனர். உடனே பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் நிர்மலா தேவி ஆகியோர் கொரோனா விதிமுறையை மீறியதாக கடையில் உள்ளவர்களை வெளியேற்றி கடைக்கு சீல் வைத்தனர். மேலும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் உணவக உரிமையாளருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்தியூர்
இதேபோல் அந்தியூர் தேர் வீதி பகுதியில் பேரூராட்சி செயல் அதிகாரி ஹரி ராமமூர்த்தி மற்றும் அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் சுகாதார பணியாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் கடைபிடிக்க வலியுறுத்தி வந்தனர். 
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு எலக்டரிக்கல் கடையில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அதிகாரிகள் உள்ளே இருந்தவர்களை வெளியேற்றினார்கள். பின்னர் தாசில்தார் வீரலட்சுமி முன்னிலையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் அமுதா, சுகாதார அலுவலர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் போலீசார் ரங்கசமுத்திரம் பகுதியில் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள 3 பேக்கரிகளில் வாடிக்கையாளர்கள் உள்ளே அமர்ந்து டீ குடித்து கொண்டிருந்ததை பார்த்தனர். 
உடனே அதிகாரிகள் அங்கு சென்று, அங்கிருந்தவர்களை வெளியேற்றி கொரோனா தடுப்பு விதிமுறையை மீறியதாக 3 பேக்கரிகளுக்கும் சீல் வைத்தனர்.

Next Story