வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்-கலெக்டரிடம் முடி திருத்தும் தொழிலாளர்கள் கோரிக்கை
வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முடி திருத்தும் தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
சேலம்:
வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முடி திருத்தும் தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
முடி திருத்தும் தொழிலாளர்கள்
கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் மறு உத்தரவு வரும்வரை சலூன் கடைகள் மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு முடி திருத்தும் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சேலம் மண்டல முடி திருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஏராளமான தொழிலாளர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ராமனை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடு விதிகளில் சலூன் கடைகள் அடைக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் கொரோனா முதற்கட்ட ஊரடங்கில் சலூன் கடைகள் அடைக்கப்பட்டதால் 6 மாதங்களில் முடி திருத்தும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து பசி, பட்டினியோடு மிகவும் சிரமப்பட்டனர்.
கடைகளை திறக்க அனுமதி
கடன் தொல்லையால் மனம் உடைந்து சில முடி திருத்தும் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகளும் நடந்தது. நிவாரண உதவியாக அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.2 ஆயிரம் சிலருக்கு மட்டுமே கிடைத்தது. பெரும்பாலான தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை. அந்த பொருளாதார பின்னடைவில் இருந்து இன்னும் மீண்டு வரமுடியாத சூழலில் மீண்டும் சலூன் கடைகள் திறக்க தடை என்ற அறிவிப்பு அதிர்ச்சியாக உள்ளது. எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது.
எனவே, வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் சலூன் கடைகளை திறக்க உரிய அனுமதி வழங்க வேண்டும். கொரோனா நோய் தொற்றின் வீரியம் மற்றும் பரவலை நன்கு அறிவோம். எனவே, நோய் தொற்று பரவாத வகையில் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுவோம். எனவே, நேரக்கட்டுப்பாடு விதித்து கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story