சேலத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் விதிமுறையை மீறி பிளஸ்-1 வகுப்புக்கு நுழைவுத்தேர்வு?-கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை
சேலத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் விதிமுறையைமீறி பிளஸ்-1 வகுப்புக்கு நுழைவுத்தேர்வு நடந்ததாக வந்த புகாரின் பேரில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சேலம்:
சேலம் 4 ரோடு பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்த 10-ம் வகுப்பு மாணவர்கள் பிளஸ்-1 வகுப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நேற்று நடத்தப்படும் என்று பள்ளி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பு பள்ளியில் படித்த 10-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. அதில், 26-ந் தேதி காலை 9 மணிக்கு பிளஸ்-1 வகுப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. பள்ளியில் படித்த 10-ம் வகுப்பு மாணவர்கள் சேர விருப்பம் தெரிவித்தால் நுழைவுத்தேர்வு எழுத வர வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்தனர். பின்னர் மாணவர்கள் அனைவரும் பள்ளி வளாகத்திற்குள் சமூக இடைவெளியுடன் தேர்வு எழுத அமரவைக்கப்பட்டனர். பின்னர் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள் வழங்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பேரில் அவர், சம்பந்தப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியரை செல்போனில் தொடர்பு கொண்டு எச்சரிக்கை செய்தார். இதையடுத்து தேர்வு எழுத வந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பிளஸ்-1 வகுப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்த கல்வித்துறையிடம் அனுமதி பெறப்பட்டதா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story