தடுப்பூசி போடாமலேயே மூதாட்டியின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததால் பரபரப்பு


தடுப்பூசி போடாமலேயே மூதாட்டியின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 April 2021 5:10 AM IST (Updated: 27 April 2021 5:10 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் தடுப்பூசி போடாத மூதாட்டியின் செல்போனுக்கு, தடுப்பூசி போட்டதாக குறுஞ்செய்தி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்:
சேலத்தில் தடுப்பூசி போடாத மூதாட்டியின் செல்போனுக்கு, தடுப்பூசி போட்டதாக குறுஞ்செய்தி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா தடுப்பூசி
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கீதா (வயது 60). இவர் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக சென்றார். அப்போது அங்கிருந்த பணியாளர்கள் இணைய தளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து விட்டு வாருங்கள் என்று கூறியுள்ளனர். இதையடுத்து அவர் இணைய தளத்தில் பெயரை பதிவு செய்து உள்ளார்.
பின்னர் மீண்டும் கிச்சிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற அவர் சிறிது நேரம் காத்திருந்தார். அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதை படித்து பார்த்த போது அதில் அவருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளதாக செய்தி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக நான் கிச்சிப்பாளையம் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் நின்று கொண்டு உள்ளேன். ஆனால் நான் கருங்கல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக எனது செல்போன் எண்ணுக்கு எப்படி குறுஞ்செய்தி வரும் என்று புலம்பினார்.
நடவடிக்கை
பின்னர் இது குறித்து அவர் அங்கிருந்த நர்சுகளிடம் கேட்டார். அதற்கு அவர்கள் எங்கோ தவறு நடந்து உள்ளது என்று கூறி உள்ளனர். பின்னர் மூதாட்டி நர்சுகளிடம் தனக்கு தடுப்பூசிபோடும் படி கேட்டார். அதற்கு தடுப்பூசி போட மறுத்தனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து சேலம் மாநகராட்சி நகர் நல அலுவலர் பார்த்திபனிடம் கேட்ட போது, இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் மூதாட்டி கீதாவுக்கு கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசி போடாமலே தடுப்பூசி போடப்பட்டதாக தகவல் சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியது. இதனால் நேற்று சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story