கொரோனா ஊரடங்கால் கோவில்கள் நடை சாத்தப்பட்டன- வெளியே நின்று சாமியை தரிசித்த பக்தர்கள்


கொரோனா ஊரடங்கால் கோவில்கள் நடை சாத்தப்பட்டன- வெளியே நின்று சாமியை தரிசித்த பக்தர்கள்
x
தினத்தந்தி 27 April 2021 1:18 AM GMT (Updated: 27 April 2021 1:18 AM GMT)

கொரோனா ஊரடங்கால் கோவில்களில் நடை சாத்தப்பட்டதால் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமி கும்பிட்டனர்.

ஈரோடு
கொரோனா ஊரடங்கால் கோவில்களில் நடை சாத்தப்பட்டதால் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமி கும்பிட்டனர்.
நடை சாத்தப்பட்டது
தமிழகத்தில் நேற்று முதல் கொரோனா நடத்தை விதிமுறைகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  வார நாட்களில் குறைந்த பக்தர்களுடன் வழிபாட்டு தலங்கள் இயங்கலாம் என்ற அறிவிப்பு நேற்று முதல் மாற்றப்பட்டு, முழுமையாக மூடப்பட்டன. இதனால் ஈரோட்டில் நேற்று அனைத்து மத வழிபாட்டு தலங்களும் அடைக்கப்பட்டன. ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில், கோட்டை பெருமாள் கோவில், மகிமாலீஸ்வரர் கோவில், புகழ் பெற்ற பெரிய மாரியம்மன் கோவில், திண்டல் வேலாயுதசாமி கோவில் உள்பட அனைத்து கோவில்களும் நேற்று நடை சாத்தப்பட்டு இருந்தன.
சாமியை தரிசித்த பக்தர்கள்
ஆனால் வழக்கம்போல கோவில்களுக்கு வந்து சாமி தரிசனம் செய்யும் பழக்கம் உள்ள பக்தர்கள் பலரும் கோவிலுக்கு வந்து தலை வாசல் முன்பு நின்று கொண்டு சாமி கும்பிட்டனர். கோவில் கோபுரங்களை நோக்கி வணங்கி தங்கள் பிரார்த்தனையை செய்தனர். கோட்டை ஈஸ்வரன் கோவில், பெரிய மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களின் முன்பு நேற்று ஏராளமான பக்தர்கள் வந்து கதவுகளின் முன்னால் நின்று கொண்டு சாமி கும்பிட்டதை பார்க்க முடிந்தது. இதுபோல் ஈரோடு புனித அன்னை ஆலயம் உள்பட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களும் அடுத்த அறிவிப்பு வரும்வரை மூடப்பட்டு உள்ளன. முஸ்லிம்கள் வீடுகளில் இருந்தே அன்றாட ரம்ஜான் சிறப்பு தொழுகையை நிறைவேற்றுவது குறித்து மாவட்ட அரசு காஜி கிபாயத்துல்லா அறிவுரைகள் வழங்கி உள்ளார்.

Next Story