போராட்டம் நடத்த திரண்ட பொதுமக்கள்


போராட்டம் நடத்த திரண்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 27 April 2021 8:30 AM IST (Updated: 27 April 2021 8:30 AM IST)
t-max-icont-min-icon

ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளை பிடிக்கக்கோரி போராட்டம் நடத்த பொதுமக்கள் திரண்டதால், தேவாலாவில் பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூர்

ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளை பிடிக்கக்கோரி போராட்டம் நடத்த பொதுமக்கள் திரண்டதால், தேவாலாவில் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம் நடத்த முயற்சி

தேவாலா பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதை யொட்டி முதுமலையில் இருந்து 3 கும்கி யானைகளை அழைத்து வந்து, ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் கேரள வனப்பகுதிக்குள் காட்டுயானைகள் இடம்பெயர்ந்தன. தற்போது அங்கிருந்து திரும்பி வந்த காட்டுயானைகள் மீண்டும் தேவாலா பகுதியில் முகாமிட்டு உள்ளது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் ரவுஸ்டன்மூலா பகுதியில் 2 காட்டுயானைகள் தொழிலாளி ஒருவரது வீட்டை சேதப்படுத்தியது. அந்த காட்டுயானைகளை பிடிக்கக்கோரி நேற்று காலை 10 மணிக்கு தேவாலா பஜாரில் பொதுமக்கள் போராட்டம் நடத்த திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா போலீசார் விரைந்து வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், காட்டுயானைகளால் தினமும் அச்சத்துடன் வாழும் நிலை  உள்ளது. அவை வீடுகளை உடைத்து வருவதால், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுகிறோம். 

எனவே காட்டுயானைகளிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் 2 காட்டுயானைகள் மட்டுமே ஊருக்குள் வந்து வீடுகளை உடைக்கிறது. எனவே அவற்றை பிடிக்க வேண்டும் என்றனர்.

அதற்கு பதிலளித்து பேசிய போலீசார், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் மனுக்கள் வழங்கினால் நடவடிக்கை எடுக்க முன்வருவார்கள். எனவே போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். இதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


Next Story