மத்திகிரி அருகே பெண் கொடூர கொலை கைகள் கட்டப்பட்டு, அழுகிய நிலையில் உடல் மீட்பு


மத்திகிரி அருகே பெண் கொடூர கொலை கைகள் கட்டப்பட்டு, அழுகிய நிலையில் உடல் மீட்பு
x
தினத்தந்தி 27 April 2021 8:33 AM IST (Updated: 27 April 2021 8:34 AM IST)
t-max-icont-min-icon

மத்திகிரி அருகே தைலதோப்பில் கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அழுகிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.

மத்திகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே தளி செல்லும் சாலையில் பேளகொண்டப்பள்ளி உள்ளது. இங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் தைலதோப்பில் நேற்று மாலை துர்நாற்றம் வீசியது. இதை அந்த வழியாக சென்றவர்கள் கவனித்து அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. மேலும் அவர் கொலை செய்யப்பட்டு சில நாட்கள் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
வடமாநில பெண்ணா?
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் மத்திகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா். கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு சுமார் 30 வயது இருக்கும். அவர் வடமாநில பெண்ணாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓசூர் பேளகொண்டப்பள்ளி பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வருகிறார்கள்.
பரபரப்பு
அவர்கள் அந்த பகுதியில் குடியிருந்து வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள பெண் ஒருவர் தான் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர் அருகே பேளகொண்டப்பள்ளியில் தைலதோப்பில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கைகள் கட்டப்பட்ட நிலையில் உடல் கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story