திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். கலெக்டர் வேண்டுகோள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி கூறியதாவது:-
பராமரிப்பு மையங்கள்
தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நடைமுறைகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சோதனைகள், கண்காணிப்புகள், கட்டுப்படுத்துதல் ஆகிய மூன்று நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை தினமும் 1500 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒவ்வொரு தாலுகாவிலும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு மையங்கள் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
54 நடமாடும் மருத்துவ வாகனங்கள்
தற்போது வரை கொரோனா சிகிச்சைக்காக 1500 படுக்கை வசதிகள் இருந்த நிலையில் சேத்துப்பட்டு, ஆரணி, எஸ்.வி.நகரம் உள்பட பல்வேறு இடங்களில் புதிய பராமரிப்பு மையங்கள் திறக்கப்பட்டு சிகிச்சை அளிக்க 2,000 படுக்கைகளாக உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் திருவண்ணாமலையில் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள புதிய ஆயுஷ் மருத்துவமனையில் சித்த மருத்துவ முறையில் கொரானா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொற்று அதிகமாக உள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் குறைந்த அளவு பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா பராமரிப்பு மையங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காட்டாம்பூண்டி சுகாதார வட்டம், செங்கம் சுகாதார வட்டம் போன்ற இடங்களில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் அதிகமாக கண்டறியப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 54 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. மேலும் அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் கொரோனா காய்ச்சல் முகாம்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். கொரோனா நோய் தொற்று குறைவதற்கு பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும்.
தவிர்க்க வேண்டும்
இது வரை முககவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பெரிய கடைகளுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் கொரோனா புதிய கட்டுப்பாடுகள் கண்காணிக்க திருவண்ணாமலை மாவட்டத்தில் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில், கடைகளில் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான டாக்டர்கள், மருந்துகள், ஆக்சிஜன், மருத்துவமனைகள், பராமரிப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் தினமும் 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது தினமும் 300-ல் இருந்து 350 பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story