வேலூர் மாநகராட்சி பகுதியில் 92 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


வேலூர் மாநகராட்சி பகுதியில் 92 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
x
தினத்தந்தி 27 April 2021 5:12 PM IST (Updated: 27 April 2021 5:12 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாநகராட்சி பகுதியில் இதுவரை 92 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

மாநகராட்சி பகுதியில் கொரோனா பாதிப்பு

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பில் 60 சதவீதம் பேர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். எனவே மாநகராட்சி பகுதியில் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

 முககவசம் அணியாத, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நபர்களுக்கு அபராதம் விதிப்பு, கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

வேலூர் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் வருகிற 30-ந் தேதிக்குள் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாநகராட்சி 4 மண்டலங்களின் பல்வேறு பகுதிகளில் தினமும் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியம் மற்றும் சிறப்பு முகாம் குறித்து மாநகராட்சி ஊழியர்கள் தெரு, தெருவாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். 

92 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

வேலூர் மாநகராட்சி பகுதியில் இதுவரை 92 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் 5 லட்சத்து 15 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். அவர்களில் 1 லட்சத்து 86 ஆயிரம் பேர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, சிறப்பு தடுப்பூசி முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. வேலூர் மாநகராட்சி பகுதியில் இதுவரை 92 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 66 ஆயிரம் பேர் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.

தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் குறித்து வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வின்போது பொதுமக்களில் சிலருக்கு தடுப்பூசி போட்டு கொள்வதால் உடல்நலக்குறைவு ஏற்படுமோ என்ற எண்ணம் உள்ளது. அச்ச உணர்வு காரணமாக அவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். தடுப்பூசி போடுவதால் எவ்வித உடல்நலக்குறைவும், பக்க விளைவும் ஏற்படாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம் என்றனர்.

Next Story