திருவண்ணாமலையில் பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு. 2 பேர் கைது.


திருவண்ணாமலையில் பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு. 2 பேர் கைது.
x
தினத்தந்தி 27 April 2021 6:58 PM IST (Updated: 27 April 2021 6:58 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை
பணத்தை திருப்பி கேட்டதால் விரோதம்

திருவண்ணாமலை செங்கம் சாலை 3-வது தெருவை சேர்ந்தவர் அருணை ஆனந்தன் (வயது 43). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் பா.ஜ.க. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணைத் தலைவராக உள்ளார். இவர் தனது கட்சி பிரமுகர் ஒருவருக்கு சிறுக, சிறுக ரூ.28 லட்சம் வரை பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

 தேர்தல் முடிந்த பிறகு பணத்தை திருப்பி கொடுப்பதாக பணம் பெற்றவர் ஆனந்தனிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால் தேர்தல் முடிந்த பிறகும் பணத்தை கொடுக்கவில்லை எனவும், இதனால் அவர்களுக்கு இடையே விரோதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தாக்கினார்

இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் ஆனந்தனின் வீட்டின் கதவை சிலர் வேகமாக தட்டியுள்ளனர். உடனே ஆனந்தன் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது வெளியில் பா.ஜ.க. மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திருவண்ணாமலை அண்ணாநகரை சேர்ந்த அஜித்குமார் (26) மற்றும் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். 

வீட்டில் இருந்து வெளியே வந்த ஆனந்தனை அஜித்குமார் போன் அடித்தால் எடுக்க மாட்டியா? என்றும், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு அசிங்கப்படுத்துவியா? என்றும் கேட்டு திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரிடம் இருந்து ஆனந்தனை மீட்டு வீட்டிற்குள் அழைத்து வந்தனர்.
 பெட்ரோல் குண்டு வீச்சு

பின்னர் அவர்கள் பெட்ரோல் குண்டை வீட்டு கதவில் வீசி விட்டு குடும்பத்தோடு கொளுத்தி விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். ஆனால் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் உடையாமல் வீட்டின் வெளியே விழுந்தது.

இது குறித்து ஆனந்தன் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

2 பேர் கைது

மேலும் அங்கு கீழே விழுந்து கிடந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலையும் கைப்பற்றினர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் திருவண்ணாமலை அண்ணாநகரை சேர்ந்த அஜித்குமார், ஆணாய்பிறந்தான் கிராமத்தை சேர்ந்த பா.ஜ.க. உறுப்பினர் சதீஷ்குமார் (23), தாமரை நகரை சேர்ந்த பாபு என்ற சதீஷ்குமார் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரையும், சதீஷ்குமாரையும் கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Next Story