வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி


வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 27 April 2021 8:24 PM IST (Updated: 27 April 2021 8:24 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 6-ந் தேதியன்று 2,368 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது. இத்தேர்தலில் 78.62 சதவீத வாக்குகள் பதிவாகியது. தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் ஆகியவை தேர்தல் முடிந்ததும் அன்று இரவே அந்தந்த தொகுதி வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இத்தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) எண்ணப்படுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுபோல் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் கடைபிடித்து வாக்கு எண்ணும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை

மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், போலீசார் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், விருப்பப்படுபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் அறை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், மைக்ரோ அப்சர்வர்கள், பாதுகாப்பு அறையில் இருந்து வாக்கு எண்ணும் அறைக்கு மின்னணு வாக்கு எந்திரங்களை கொண்டு செல்லும் ஊழியர்கள், போலீசார் என 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு இன்று (புதன்கிழமை) கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்

இதனிடையே வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுபவர்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பப்படுபவர்கள் தடுப்பூசி செலுத்தும் விதமாக நேற்று 7 தொகுதிகளிலும் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அந்த வகையில் விழுப்புரம் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபடுபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான சிறப்பு முகாம் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இம்முகாமில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், போலீசார் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் பலரும் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதேபோல் விக்கிரவாண்டி, செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூர், திருக்கோவிலூர் ஆகிய சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் பணியில் ஈடுபடுபவர்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பப்பட்டவர்கள் முகாம் நடந்த இடத்திற்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Next Story