தேனி மாவட்டத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம் கலெக்டர் தகவல்
தேனி மாவட்டத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு வருவதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அரசு துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பேசியதாவது:-
தேனி மாவட்டத்தில் கிராம ஊராட்சி பகுதிகளில் 64 இடங்கள், நகராட்சி பகுதிகளில் 31 இடங்கள், பேரூராட்சி பகுதிகளில் 30 இடங்கள் என மொத்தம் 125 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. முககவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணித்தல், கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை, நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை குறைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி பூண்டு சந்தை, ஞாயிறு மற்றும் வியாழக்கிழமை நடைபெற்று வந்ததை தற்போது திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டியில் வாரச்சந்தையை மாற்றி அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்யவும், சின்னமனூர் உழவர் சந்தையினை வேளாண் விற்பனை மையத்திற்கு மாற்றம் செய்யவும், கம்பம் தினசரி மார்க்கெட்டை வேறு இடத்துக்கு மாற்றவும், தேனி உழவர் சந்தையை வேளாண் விற்பனை ஒழுங்குமுறை கூடத்துக்கு மாற்றவும், போடி உழவர் சந்தையை இடமாற்றம் செய்யவும் வியாபாரிகள் சங்கத்தினரிடம் ஆலோசனை கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிகிச்சை மையம்
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சென்று வருவதற்கு ஏதுவாக 3 அரசு பஸ்கள் இயக்கப்படும். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி உள்ளது. ஆக்சிஜன் போதுமான அளவு இருப்பில் உள்ளது. போடி அரசு என்ஜினீயரிங் கல்லூரி, தேனி பழைய அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல், தப்புக்குண்டு, கோம்பை, வடவீரநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியையும் கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, கொரோனா தடுப்பு பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், பெரியகுளம் சப்-கலெக்டர் சினேகா, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. சக்திவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story