வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை


வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை
x
தினத்தந்தி 27 April 2021 9:09 PM IST (Updated: 27 April 2021 9:09 PM IST)
t-max-icont-min-icon

வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் அறிவித்து உள்ளார்.

ஊட்டி

வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் அறிவித்து உள்ளார். 

ஆலோசனை கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கை வருகிற 2-ந் தேதி ஊட்டி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுகிறது. 

இங்கு வரும் அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய கொரோனா வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடைபெற்றது. 

கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:- 

வாக்கு எண்ணும் மையத்துக்குள் வரும் வேட்பாளர்கள், அரசியல் கட்சி முகவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். 

செல்போனுக்கு தடை 

வாக்கு எண்ணும் அறைகளின் நுழைவாயிலில் அனைத்து நபர்களும் கட்டாயம் உடல் வெப்ப பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.  

வாக்கு எண்ணிக்கை நாளன்று மையத்துக்குள் செல்ல வேட்பாளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புதிதாக வாகன அனுமதி பெற வேண்டும். முகவர்கள் செல்போனை கொண்டு தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் வாக்கு எண்ணும்போது வேட்பாளர்களின் முகவர்கள் தேவையின்றி ஒரு மேஜையில் இருந்து, மற்றோரு மேஜைக்கோ அல்லது ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கோ செல்லக்கூடாது. 

சீல் வைக்கப்படும் 

மையத்துக்குள் 17-சி படிவ நகல், பேனா, வெள்ளை தாள்கள் மட்டும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. 

வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாதுகாப்பு கிடங்குக்கு ஜி.பி.எஸ். பொருத்தப்பட்ட வாகனங்களில் கொண்டு செல்லப்படும். 

அப்போது கட்சி பிரதிநிதிகள் செல்லலாம். அறைகளின் உள்ளே வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அதிகாரி நிர்மலா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மோனிகா (ஊட்டி), ரஞ்சித் சிங் (குன்னூர்), ராஜ்குமார் (கூடலூர்) மற்றும் அரசுத்துறை அதிகாாிகள் உடனிருந்தனர்.


Next Story