ஊட்டியில் உணவகங்கள் தேநீர் கடைகளில் பார்சல்


ஊட்டியில் உணவகங்கள் தேநீர் கடைகளில் பார்சல்
x
தினத்தந்தி 27 April 2021 9:14 PM IST (Updated: 27 April 2021 9:14 PM IST)
t-max-icont-min-icon

புதிய கட்டுப்பாடுகள் காரணமாக ஊட்டியில் உணவகங்கள், தேநீர் கடைகளில் பார்சல் வழங்கப்படுகிறது.

ஊட்டி

புதிய கட்டுப்பாடுகள் காரணமாக ஊட்டியில் உணவகங்கள், தேநீர் கடைகளில் பார்சல் வழங்கப்படுகிறது.

புதிய கட்டுப்பாடுகள் 

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. அதன்படி அனைத்து உணவகங்கள் மற்றும் பேக்கரிகள், டீக்கடைகளில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. அங்கு உட்கார்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை. 

நீலகிரி மாவட்டம் ஊட்டி சுற்றுலா நகரம் என்பதால் வெளியிடங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் உணவகங்ளுக்கு சென்று உணவருந்தி சென்றனர். சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால், உணவகங்களில் வாடிக்கையாளர்கள் கணிசமாக குறைந்தனர்.

வெறிச்சோடியது 

மேலும் தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்வது இல்லை. ஏற்கனவே உணவகங்களில் உணவு அருந்த வருகிறவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டது. 

புதிய கட்டுப்பாடுகள் காரணமாக ஊட்டியில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள், டீக்கடைகளில் வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஓட்டல்களில் பார்சல் வாங்க வருபவர்கள் உள்ளே அமருவதை தடுக்க இருக்கைகள் மேஜை மீது வைக்கப்பட்டு உள்ளது. 

பெரிய உணவகங்கள் முதல் சிறிய உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் வழங்கப்படுகிறது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் இல்லாததால் முன்பு இருந்தது போல் வியாபாரம் இல்லை என்று கருத்து தெரிவிக்கின்றனர். 

ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள் 

ஊட்டியில் நிலவும் காலநிலை காரணமாக பொதுமக்கள் பேக்கரி மற்றும் டீக்கடைகளில் அமர்ந்து டீ குடிப்பது வழக்கம். தற்போது முன்பு பார்சல் மட்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகிறார்கள். 

இதுகுறித்து உணவக உரிமையாளர்கள் கூறும்போது, கடந்த ஆண்டு கோடை சீசனில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. சமீபத்தில் சுற்றுலா பயணிகள் வந்து சென்றதால் வியாபாரம் பழைய நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்த்தோம். 

புதிய கட்டுப்பாடுகளால் வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்டு உள்ளோம். 
சமூக இடைவெளியை கடைப்பிடித்து 50 சதவீதம் பேர் அமர்ந்து உணவருந்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story