நீலகிரி தேயிலை தூளின் தேவை அதிகரிப்பு
நீலகிரி தேயிலை தூளின் தேவை அதிகரித்து உள்ளதாக சர்வதேச மேலாண்மையியல் ஆலோசகர் தெரிவித்து உள்ளார்.
குன்னூர்
நீலகிரி தேயிலை தூளின் தேவை அதிகரித்து உள்ளதாக சர்வதேச மேலாண்மையியல் ஆலோசகர் தெரிவித்து உள்ளார்.
நீலகிரி தேயிலை தூள்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை தொழிற்சாலைகள், தேயிலை தொழிற்சாலைகள் தயாரிக்கும் தேயிலை தூள் குன்னூர் தேயிலை ஏல மையத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நீலகிரி தேயிலை தூளின் தேவை அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து சர்வதேச மேலாண்மையியல் ஆலோசகர் பி.எஸ்.சுந்தர் கூறியதாவது:-
கடந்த 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 16- வது ஏலத்தில் சராசரி விலை கிலோ ரூ.114.53 பைசாவாக இருந்தது. இந்த விலை இந்த ஆண்டின் குறைவான சராசரி விலை ஆகும். ஆனால் இந்த ஆண்டின் அதிக விற்பனையாக 93 சதவிகித தேயிலை தூள் விற்பனையானது.
நோய் எதிர்ப்பு சக்தி
இந்த அதிக அளவு விற்பனைக்கு கொரோனா காலத்தில் தேயிலை தூள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்ற பரவலான நம்பிக்கையே காரணம் ஆகும். கடந்த ஆண்டு அமலில் இருந்த ஊரடங்கின் போது நீலகிரி தேயிலைக்கு தேவை அதிகம் இருந்தது.
வடமாநிலங்களில் குளிர் காலமாக இருந்ததால் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை தேயிலை தூள் உற்பத்தி இல்லாமல் இருந்தது. ஏப்ரல் மாதத்தில் உற்பத்தி தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தபோது வறட்சி ஏற்பட்டு தேயிலை தூள் உற்பத்தி குறைந்தது.
தேவை அதிகரிப்பு
மேலும் வர்த்தகர்களின் மத்தியில் தேயிலை தூளின் இருப்பு குறைந்து விடுமோ என்ற எண்ணம் நிலவியது. இதன் காரணமாக உள்நாட்டு வர்த்தகர்களின் கவனம் நீலகிரி தேயிலை தூளின் பட்சம் திரும்பி இருப்பதால் அதன் தேவை அதிகரித்து உள்ளது.
நீலகிரி தேயிலை உற்பத்தி செய்யும் பணிக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதால் அதன் உற்பத்தியும் அதிகரித்து இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story