திருப்பூரில் பெண் துணை தாசில்தாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.


திருப்பூரில் பெண் துணை தாசில்தாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
x
தினத்தந்தி 27 April 2021 9:48 PM IST (Updated: 27 April 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பெண் துணை தாசில்தாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்
திருப்பூரில் பெண் துணை தாசில்தாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. 
துணை தாசில்தாருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் நெருக்கடி மிகுந்த திருப்பூர் மாநகர பகுதியில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளது. திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் கிருமி நாசினி தெளிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராக பெண் அதிகாரி பணியாற்றி வருகிறார். இவருடைய சொந்த ஊர் ஈரோடு ஆகும். தற்போது திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் குடியிருந்து பணியாற்றி வருகிறார்.
கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அங்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த சனிக்கிழமை அந்த பெண் அதிகாரி திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்திற்கு வந்து சென்றுள்ளார். அதன் பிறகு அவர் விடுப்பில் உள்ளார்.
2 நாட்கள் மூடல்
இதை தொடர்ந்து திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் நேற்று மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் குழுவினர் வந்து கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். தாசில்தார் அலுவலகம் மற்றும் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தாசில்தார் அலுவலக பணியில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று, இன்று (புதன்கிழமை) ஆகிய 2 நாட்கள் தாசில்தார் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாசில்தார் அலுவலகத்துக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ முகாம்
இதுபோல் ராஜாராவ் வீதியில் வக்கீல் ஒருவர் வீட்டில் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து வாலிபாளையம் பகுதியில் மாநகராட்சி சுகாதார துறை குழுவினர் காய்ச்சல் முகாம் நேற்று நடத்தினார்கள். அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
போலீஸ் இன்ஸ்பெக்டர்
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரகத்திற்குட்பட்ட திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறிகள் இருந்ததை தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்  தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 
போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று மதியம் வரை திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் எந்த விதமான சுகாதார பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே உடனடியாக திருமுருகன்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் போலீஸ் நிலையத்தில் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story