உடுமலை அருகே 700 ஆண்டு பழமையான கல்வெட்டுடன் கூடிய சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.


உடுமலை அருகே 700 ஆண்டு பழமையான கல்வெட்டுடன் கூடிய சிற்பம்  கண்டெடுக்கப்பட்டது.
x
தினத்தந்தி 27 April 2021 9:55 PM IST (Updated: 27 April 2021 9:55 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை அருகே 700 ஆண்டு பழமையான கல்வெட்டுடன் கூடிய சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

திருப்பூர்
உடுமலை அருகே 700 ஆண்டு பழமையான கல்வெட்டுடன் கூடிய சிற்பம்  கண்டெடுக்கப்பட்டது.
நாகரிகம்
மனிதன் தோன்றிய காலம்குறித்து அறிய மிகப்பெரிய ஆய்வு நடந்து வருகிறது. மனிதன் நாகரிகம் அடைவதற்கு முன்பு ஆதி மனிதனின் வரலாற்றை பார்க்கும்போது, அக்கால மனிதர்கள் நாடோடிகளாகவும் வேட்டையாடும் தொழிலை மேற்கொண்டவர்களாகவும் இருந்தது புலனாகும்.  அன்றைய இனக்குழுக்களுக்கு செல்வம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை. ஆனால் அவர்களின் தேவை உணவு மட்டுமே. எனவே ஒரு குழுவுக்கு கிடைக்க கூடிய உணவை மற்ற குழுவினர் கவர்ந்து செல்லும்போது மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலால்  அடிக்கடி போரிட்டு கொண்டிருந்தனர். அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஏராளம். அதன்பின்னர் படிப்படியாக நாகரிக வாழ்வை பெற நீண்ட காலம் தேவைப்பட்டது. 
மக்கள் மத்தியில் அறநெறிகளை பரப்பி நாகரிக நல்வாழ்வு வாழ  2500 ஆண்டுகளாக அவ்வப்போது சமயத் தலைவர்களும், அறிஞர்களும், சித்தர்களும் தோன்றி நல்வழி படுத்தி வந்துள்ளனர். பழந்தமிழகத்தை பொறுத்தவரை  பக்தி இலக்கியங்களும் அவற்றை தோற்றுவித்த சமய குரவர்களும், ஆழ்வார்களும் பணியை பெருமளவில் மேற்கொண்டனர். இவற்றுக்கு உறுதுணையாக பண்டைய கோவில்களும் திகழ்ந்தன. கோவில் வழிபாடு நடக்கும் இடமாக மட்டும் இல்லாமல் பண்டைய அரசு கருவூலங்களாகவும், எண்ணற்ற சமூக பணிகளை மேற்கொள்ளும் இடங்களாகவும் இருந்தன.  மேலும் கல்வி போதிக்கும் சாலைகளாகவும் அன்று விளங்கின. 
அவினாசி
 கொங்கு மண்டலத்தை பொருத்தவரை சைவ சமய குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரால் தேவாரப் பாடல் பெற்ற கொங்கேழ் சிவாலயங்களில் முதன்மையானது முதலை உண்ட பாகலனை வா என்று அழைத்து உயிர்ப்பித்த திருப்புக்கொளியூர் என்று அழைக்கப்பெறும் அவினாசியாகும். இந்த நிகழ்ச்சியை முதலை வாய்ச்சிற்ப வடிவத்தில் தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் காணமுடிகிறது. அவினாசி கோவில் பற்றி மாணிக்கவாசக பெருமான் தனது திருவாசகத்தில் குறிப்பிட்டுள்ளார். 
அவினாசி கோவிலில் நந்தா விளக்கு எரிப்பதற்காகவும், பூசைகள் தடையின்றி நடைபெறவும் கோவில் திருவிழாக்கள் நடத்துவதற்காகவும் மலைமண்டலம்  (கேரளம்), அமராவதி நதிக்கரையிலும் (உடுமலை கிழக்கு வட்டம் ) நிலக்கொடைகளை கொடுத்துள்ளனர். இந்த தகவல் அவினாசி கோவில் கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளது.
கல்வெட்டு
இந்த நிலையில் திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பொறியாளர் சு. ரவிக்குமார், சு.சதாசிவம் மற்றும் க.பொன்னுசாமி ஆகியோர் உடுமலையை அடுத்த கணபதி பாளையம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது  பண்டைய பாண்டிய பேரரசு முத்திரையுடன் 700 ஆண்டு பழமையான கல்வெட்டையும் கண்டெடுத்தனர். 
அந்த கல்வெட்டு குறித்து  ரவிக்குமார் கூறியதாவது:- 
திருப்பூரை அடுத்த அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் போன்று கணபதி பாளையம் கிராமத்தில் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் நிர்வாகி சவுந்தர்ராஜ் கூறியதன் பேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் சிற்பத்துடன் கூடிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. அந்த கல்வெட்டு சிற்பம் 90 செ.மீ உயரமும், 33 செ.மீ அகலமும் கொண்டது. இந்த சிற்பத்தின்  முன்பக்கத்தில் பிறை சந்திரனும் அதற்கு கீழே நின்ற நிலையில் வணங்கியபடி சுந்தரமூர்த்தி நாயனாரும், அவருக்கு இரு பக்கமும் வெண்சாமரமும் காட்டப்பட்டுள்ளது. 
பாண்டியர் கால மீன்சின்னம்
 அதற்கு கீழே சுந்தரர் தேவார பதிகம் பாடி சிறுவனை உயிர்த்தெழ வைத்த முதலை வாய்ச்சிற்பம் காட்டப்பட்டுள்ளது. அதற்குப் பின் பக்கம் சூலாயுதமும் அதற்கு இரு பக்கங்களிலும் மங்கல சின்னங்களான குத்துவிளக்கும், கும்பமும் காட்டப்பட்டுள்ளன. 3-வது பக்கத்தில் 15 வரிகளைக்கொண்ட கல்வெட்டு உள்ளது. 
அதில் பேரூர் கருவாநல்லூர்  என்று இன்றைய கணபதிபாளையம் குறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மூலம் அவினாசி ஆளுடைய நாயனார் கோவிலுக்கு தேவதானமாக விடப்பட்ட நிலங்களுக்கு பாதகம் செய்வோர் 7 தலைமுறைக்கும் பாதிக்கப்படுவர் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. 4-வது பக்கத்தில் இது ஓர் அரசு ஆணை என்பதை தெரிவிக்கும் பொருட்டுப் பண்டைய  பாண்டியப் பேரரசின் முத்திரையான 2 மீன்கள் மேல்நோக்கியும் அவற்றின் நடுவே செண்டும் காட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் இப்பகுதி பண்டைய காலத்தில் பாண்டியரின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்ததை நாம் அறியமுடிகிறது. இது கொங்கு மண்டல வரலாற்றில் ஒரு தனிச்சிறப்பாகும்.
பெண் சிற்பம்
இங்கு மேலும் 130 செ.மீ உயரமும், 30 செ.மீ அகலமும் கொண்ட ஒரு சிற்பமும் உள்ளது. அதன் முன் பக்கத்தில் ஒரு பெண் நின்ற நிலையில் மிகச் சிறந்த அணிகலன்களுடன், காலில் சிலம்பும் அணிந்து வணங்கியபடி உள்ளார். அவருக்கு இரு பக்கமும் தாமரை மொட்டுக்கள் காட்டப்பட்டுள்ளன. அதற்கு கீழே இன்றுவரை ஊரக மக்கள் வாழ்வில்  பெரும் செல்வமாக விளங்கும் மாடு கட்டப்பட்டுள்ளது. அதற்கும் கீழே 2 மீன்கள் மேல்நோக்கியும் அவற்றுக்கிடையே தாமரை மலரும் காட்டப்பட்டுள்ளது. இதற்குப் பின்பக்கம்முதலைவாய்ச் சிற்பம் காட்டப்பட்டுள்ளது. பாண்டியப் பேரரசின் முத்திரை மற்றும் கல்வெட்டு அமைப்பை வைத்துப் பார்க்கும்போது இவை 700 ஆண்டுகள் பழமையானவை ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story