நாளுக்கு நாள் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: கடலூர் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 100 படுக்கை வசதிகள் தயார் கொரோனா தடுப்பூசி போடும் இடம் மாற்றம்


நாளுக்கு நாள் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: கடலூர் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 100 படுக்கை வசதிகள் தயார் கொரோனா தடுப்பூசி போடும் இடம் மாற்றம்
x
தினத்தந்தி 27 April 2021 10:32 PM IST (Updated: 27 April 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கடலூர் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 100 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும், இதற்காக கொரோனா தடுப்பூசி போடும் இடம் மாற்றப்பட்டு உள்ளதாகவும் அதிகாரி தெரிவித்தார்.

கடலூர்,


கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்று பரவல் குறைந்தபாடில்லை. கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மொத்தம் 750 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் மகப்பேறு, அறுவை சிகிச்சை, குழந்தை வார்டுகள் போக 250 படுக்கை வசதிகள் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. 

ஆனால் நேற்று முன்தினம் வரை 250 படுக்கைகளிலும் நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதை தாண்டியும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதால், அவர்களுக்கு படுக்கை வசதி செய்து கொடுக்க முடியாமல் ஊழியர்கள் திணறினர். சிலர் அங்கு பணியாற்றி வந்த செவிலியர்கள், ஊழியர்களிடம் தகராறு செய்து, தங்களுக்கு படுக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று வாக்குவாதம் செய்தனர்.

100 படுக்கை வசதி

இது பற்றி மருத்துவம் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபுவிடம் கேட்ட போது, நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நோயாளிகளின் தேவைக்கேற்ப சில வார்டுகளை கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்றி வருகிறோம். தற்போது கூடுதலாக 100 படுக்கை வசதிகளை ஏற்படுத்தி இருக்கிறோம். 

ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்ட பழைய மகப்பேறு பிரிவு கட்டிடம் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டதால், தற்போது தடுப்பூசி போடும் பணி காசநோய் பிரிவு வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்றார்.

Next Story