மதுக்கடைகள் மூடல் எதிரொலி: கடலூருக்கு படையெடுத்த புதுச்சேரி மாநில மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர்
புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் அங்கிருந்த மதுபிரியர்கள் கடலூரை நோக்கி படையெடுக்க தொடங்கினர். அவர்கள் டாஸ்மாக் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர்.
கடலூர்,
கடலூர் மாவட்ட எல்லையோரம் புதுச்சேரி மாநிலம் உள்ளது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அந்த மாநில அரசு விதித்தது.
இதற்கிடையில் கலால் துறையினர், மதுக்கடைகள், பார்கள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் நாளை (அதாவது நேற்று) முதல் வருகிற 30-ந்தேதி (நாளை மறுநாள்) வரை மூடப்படும் என அறிவித்தனர்.
திடீரென மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் அம்மாநில மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கலால் துறையினர் அறிவித்தபடி நேற்று காலை முதல் உடனடியாக மதுக்கடைகள், பார்கள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் புதுச்சேரி மாநில மதுபிரியர்கள் கடலூர் மாவட்ட எல்லையோரம் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.
கூட்டம் அலைமோதியது
அதன்படி நேற்று கடலூர் பஸ் நிலையம் அருகே உள்ள 2 டாஸ்மாக் கடைகளிலும் புதுச்சேரி மாநில மதுபிரியர்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்களுடன் உள்ளூர் மதுபிரியர்களும் மதுபாட்டில்கள் வாங்க வந்ததால், டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
புதுச்சேரியை போன்று தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகளை மூடி விட்டால் என்ன செய்வது என்று நினைத்த மதுபிரியர்கள் முன்கூட்டியே அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்கி குவி்த்தனர்.
ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த மாவட்ட நிர்வாகம் கடைகளுக்கு முன்பு தடுப்பு கட்டைகள் அமைத்து இருந்தது. அதில் மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் நிற்க அறிவுறுத்தப்பட்டனர்.
போட்டி போட்டு வாங்கிச்சென்றனர்
அதன்படி மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்த அவர்கள் போட்டி போட்டு மதுபாட்டில்களை தங்களின் தேவைக்கேற்ப வாங்கிச்சென்றனர். ஒரு சிலர் கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கும் சென்று மது பாட்டில்களை வாங்கிச்சென்றதை பார்க்க முடிந்தது.
முன்னதாக மதுபாட்டில்கள் வாங்க வந்த மதுபிரியர்களுக்கு சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய அறுவுறுத்தப்பட்டது. முக கவசம் அணிந்தபடி வந்த மதுபிரியர்களுக்கு மட்டும் மதுபாட்டில்கள் வழங்கியதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இருப்பினும் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் நோய்த்தொற்று பரவும் ஆபத்து ஏற்பட்டது.
வழக்கமாக புதுச்சேரி மாநிலத்தில் விலை குறைவாக இருக்கும் என்பதால் கடலூர் மாவட்ட மதுபிரியர்கள் அங்குள்ள மதுக்கடைகளில் குவிந்து மதுபாட்டில்களை வாங்கி வருவார்கள்.
ஆனால் தற்போது புதுச்சேரியில் மதுக்கடைகள், பார்கள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் மூடப்பட்டு உள்ளதால் அங்குள்ள மதுபிரியர்கள் கடலூருக்கு படையடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story