காதலியை திருமணம் செய்ய முடியாத ஏக்கத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை
தென்தாமரைகுளத்தில் காதலியை திருமணம் செய்ய முடியாத ஏக்கத்தில் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் சிக்கி உள்ளது.
தென்தாமரைகுளம்,
தென்தாமரைகுளத்தில் காதலியை திருமணம் செய்ய முடியாத ஏக்கத்தில் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் சிக்கி உள்ளது.
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கட்டிட தொழிலாளி
தென்தாமரைகுளம் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் பால்குடம். இவருடைய மகன் நிஷாந்த் (வயது 21). கட்டிட தொழிலாளி. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். அந்த பெண் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
இவர்களின் காதல் விவகாரம் தெரிந்ததால் இருவர் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் கடந்த சில நாட்களாக நிஷாந்த் மனமுடைந்து காணப்பட்டார்.
தற்கொலை
நேற்று முன்தினம் இரவு நிஷாந்த் தனது அறைக்கு தூங்கச் சென்றார். நேற்று காலை வெகுநேரம் ஆகியும் அறைக்கதவு திறக்கப்படவில்லை. கதவை தட்டியும் எந்த சத்தமுமில்லை. இதனால், சந்தேகமடைந்த பெற்றோர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு, நிஷாந்த் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தினரை அழைத்து வந்து பார்த்தபோது, நிஷாந்த் ஏற்கனவே இறந்து இருந்தது தெரியவந்தது.
கடிதம் சிக்கியது
இதுகுறித்து நிஷாந்தின் தந்தை பால்குடம் தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜன், ஜான் கென்னடி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நிஷாந்த் தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, நிஷாந்தின் அறையை சோதனை செய்தபோது, அவர் கைப்பட உருக்கமாக எழுதிய கடிதம் ஒன்று போலீசாரின் கையில் சிக்கியது. அந்த கடிதத்தில் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாததால் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது சாவுக்கு வேறு யாரும் காரணமில்லை என்றும் எழுதப்பட்டு இருந்தது.
சோகம்
இச்சம்பவம் குறித்து தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் சொர்ணராணி விசாரணை நடத்தி வருகிறார்.
காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாத ஏக்கத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story