வீட்டிற்கு வெளியே தூங்கிய மூதாட்டியிடம் 6 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
குன்னம் அருகே வீட்டிற்கு வெளியே தூங்கிய மூதாட்டியிடம் 6 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துச்சென்ற டவுசர் அணிந்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குன்னம்:
தாலிச்சங்கிலி பறிப்பு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கூடலூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மனைவி லோகாம்பாள்(வயது 65). நேற்று முன்தினம் இரவு வடிவேல் மற்றும் குடும்பத்தினர், வீட்டின் உள்ளே தூங்கினர்.
லோகாம்பாள் மட்டும் வீட்டின் வெளியே பெஞ்சில் படுத்து தூங்கினார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் அங்கு வந்த மர்ம நபர், லோகாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலிச்சங்கிலியை பறித்தார்.
போலீசார் விசாரணை
இதனால் திடுக்கிட்டு கண் விழித்த லோகாம்பாள் எழுந்து பார்த்தபோது, டவுசர் மட்டும் அணிந்திருந்த மர்ம நபர் தாலிச்சங்கிலியை பறித்ததை அறிந்து சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு வருவதற்குள் அந்த நபர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இது குறித்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டிற்கு வெளியே தூங்கிய மூதாட்டியிடம் தாலிச்சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story