கொரோனா விதிகளை மீறி அதிக பயணிகளை ஏற்றிய 2 தனியார் பஸ்கள்


கொரோனா விதிகளை மீறி அதிக பயணிகளை ஏற்றிய 2 தனியார் பஸ்கள்
x
தினத்தந்தி 28 April 2021 1:49 AM IST (Updated: 28 April 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் கொரோனா விதிகளை மீறி அதிக பயணிகளை ஏற்றிய 2 தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு போக்குவரத்து அதிகாரி பரிந்துரை செய்துள்ளார்.

பொள்ளாச்சி,

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் தடுப்பூசி போடும் பணியையும் துரிதப்படுத்தி வருகின்றனர்.

கொரோனா கட்டுப்பாடுகளின் படி அரசு மற்றும் தனியார் பஸ்களில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணம் செய்ய வேண்டும். பஸ்களில் பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதியில்லை. 

அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இதனை பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 

இந்த நிலையில் பொள்ளாச்சியில் சில பஸ்களில் அரசின் கட்டுப்பாடு உத்தரவை டிரைவர்கள், கண்டக்டர்கள் மீறுவதாக பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்திற்கு புகார் சென்றது. இதையடுத்து, அவர் நேற்று பொள்ளாச்சி பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையம் ஆகியவற்றில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது ஜக்கார்பாளையம் செல்லும் தனியார் பஸ் ஒன்றும், உடுமலை செல்லும் தனியார் பஸ் ஒன்றும் மிக அதிக அளவில் பயணிகளை ஏற்றி இருந்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட டிரைவர், கண்டக்டரிடம் போக்குவரத்து அலுவலர் விசாரணை மேற்கொண்டு எச்சரித்தார். 

பின்னர் மேற்கண்ட 2 தனியார் பஸ்கள் மீதும் சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

மேலும், பஸ் நிலையத்தில் போக்குவரத்து ஊழியர்களிடம் கொரோனா விதிமுறைகளை மீறி பஸ்களை இயக்க கூடாது. அவ்வாறு இயக்குவது கண்டறியப்பட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தார்.

Next Story